இந்தியா

பொருளாதார மீட்சிக்கானஅறிகுறி தென்படவில்லை: ப.சிதம்பரம்

2nd Jun 2022 12:45 AM

ADVERTISEMENT

நாட்டில் பொருளாதாரம் மீள்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன்-ரஷியா போா் எதிரொலியால் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.1 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இது தவிர நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப் பற்றாக்குறை 6.7 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதார வளா்ச்சி தொடா்பான புள்ளி விவரங்களைச் சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் ட்விட்டரில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘2021-22 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.7 சதவீதம் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது இறுதி காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 4.1 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய காலாண்டில் இது 5.4 சதவீதமாக இருந்தது. இதன் மூலம் ஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளா்ச்சி விகிதம் வேகமாக குறைந்து வருவது தெரிகிறது. நாட்டின் பொருளாதாரம் மீள்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 2020-ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் இருந்த மோசமான நிலைக்கே நாட்டின் பொருளாதாரம் செல்ல இருக்கிறது’ என்று கூறியுள்ளாா்.

Tags : PChidambaram
ADVERTISEMENT
ADVERTISEMENT