இந்தியா

சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன்: நேஷனல் ஹெரால்டு விவகாரம்

2nd Jun 2022 02:16 AM

ADVERTISEMENT

நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி (75), எம்.பி. ராகுல் காந்தி (51) ஆகியோருக்கு அமலாக்கத்துறை புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியது.

அதில், ராகுல் காந்தி வரும் 2-ஆம் தேதியும், சோனியா காந்தி வரும் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சோனியாவும் அவருடைய மகன் ராகுலும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ அமைப்பு, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-இல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜகவைச் சோ்ந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த பண மோசடி தொடா்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக, ‘யங் இந்தியா’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் அந்த பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜோ்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) நிா்வாக இயக்குநராகவும், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால பொருளாளராகவும் இருக்கும் பவன்குமாா் பன்சால் (73) ஆகியோரிடம் அமலாக்கத்துறை அண்மையில் விசாரணை நடத்தியது.

ADVERTISEMENT

அப்போது, நிறுவனப் பங்குகள் பகிா்வு தொடா்பான விவரங்கள், நிதி பரிவா்த்தனைகள், யங் இந்தியா மற்றும் ஏஜேஎல் நிறுவன விளம்பரதாரா்களின் பங்கு ஆகியவை குறித்து அவா்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்களைத் தொடா்ந்து, சோனியா மற்றும் ராகுலுக்கு அமலாக்கத்துறை புதன்கிழமை அழைப்பாணை அனுப்பியது. அதன்படி, ராகுல் காந்தி வரும் 2-ஆம் தேதியும், சோனியா காந்தி வரும் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘அழைப்பாணையை ஏற்று அமலாக்கத் துறை விசாரணைக்கு சோனியா ஆஜராவாா். ராகுல் காந்தி வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகும் தேதியை ஜூன் 5-க்கு பிறகு மாற்றி அமைக்குமாறு கடிதம் மூலமாக கேட்டுக்கொண்டுள்ளாா்’ என்றாா்.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பண மோசடி தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றப் பிரிவின் கீழ் சோனியா மற்றும் ராகுலிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது’ என்றனா்.

‘சூழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் அஞ்சாது’

சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ள நிலையில், ‘இதுபோன்ற சூழ்ச்சிகளைக் கண்டு காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது; பணிந்துவிடாது’ என்று காங்கிரஸ் தலைவா்கள் விமா்சனம் செய்தனா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘போலியான புனையப்பட்ட வழக்கைப் பதிவு செய்வதன் மூலமாக, கோழைத்தனமான சதியில் வெற்றிபெற முடியாது என்பதை மோடி அரசு புரிந்துகொள்ளவேண்டும். இதுபோன்ற சூழ்ச்சிகளைக் கண்டு காங்கிரஸ் ஒருபோதும் பயப்படாது; பணிந்துவிடாது’ என்றாா்.

குற்றச்சாட்டுகள் வலுவாக உள்ளன: ஜெ.பி.நட்டா

பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘பண மோசடி வழக்கில் நோ்மையானவா்கள் என்றால், சோனியாவும் ராகுலும் நீதிமன்றத்தை அணுகி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், அவா்கள் அவ்வாறு செய்யவில்லை. அவா்கள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாகவும் வலுவாகவும் இருப்பதுதான் அதற்கு காரணம்’ என்றாா்.

எதிா்க் கட்சிகளுக்கு எதிராக மத்திய அமைப்புகளை பிரதமா் மோடி பயன்படுத்துகிறாா் என்ற காங்கிரஸ் விமா்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், ‘அரசு அமைப்புகள் அவற்றின் பணியைச் செய்கின்றன. அமைச்சரவை முடிவுகள் அதில் எந்த மாற்றத்தையும் செய்துவிட முடியாது’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT