இந்தியா

தன்னை தானே திருமணம் கொள்ளும் விநோதம்...கோவாவுக்கு தேன்நிலவு செல்லும் பெண்

2nd Jun 2022 04:35 PM

ADVERTISEMENT

24 வயதான ஷாமா பிந்துவுக்கான திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன. திருமண மண்டபம், திருமண தேதி என அனைத்தும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. திருமண நாளன்று எடுத்து கொள்ள வேண்டிய உறுதிமொழிகூட தயார் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நபர் மட்டும் நம் கண்ணில் தென்படவில்லை. 

ஆனால், இந்த திருமண விழாவில் இது ஒரு பிரச்னையாக இருக்கபோவதில்லை. ஏனெனில், குஜராத் வதோதராவை சேர்ந்த பிந்து, தன்னை தானே திருமணம் செய்து கொள்ள உள்ளார். ஜூன் 11ஆம் தேதி நடைபெறவுள்ள அவரின் திருமண விழாவில், அக்னி குண்டத்தை மணமக்கள் சுற்றும் சடங்கு, பொட்டு வைக்கும் நிகழ்வு என அனைத்து சடங்குகளும் நடத்தப்படவுள்ளது.

குஜராத்தில் சுய திருமணம் நடைபெறுவது இதுவே முதல்முறை. இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிந்து அளித்த பேட்டியில், "சுய அன்பின் வெளிப்பாடாகவே இதை கருத வேண்டும். திருமணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. ஆனால், மணப்பெண்ணாக இருக்க விரும்புகிறேன். 

எனவே, என்னை நானே திருமணம் செய்து கொள்கிறேன். சுய திருமணம் குறித்து இணையத்தில் விரிவாக படித்தேன். ஆனால், நம் நாட்டில் இதுபோன்ற நிகழ்வு இதுவரை நடைபெற்றதே இல்லை. நம் நாட்டில் சுய அன்புக்கு ஒரு முன்மாதிரி நானாக இருக்கலாம்.

ADVERTISEMENT

சுய திருமணம் என்பது உங்களுக்காக வாழ்வதற்கான உறுதிப்பாடு. தங்கள் மீது தாங்களே செலுத்தி கொள்ளும் நிபந்தனையற்ற அன்பு. மக்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன் அதனால் இந்த திருமணத்தை செய்து கொள்கிறேன்" என்றார்.

விளம்பரத்திற்காக இந்த திருமணத்தை நீங்கள் செய்து கொள்வதாக சிலர் கூறுகிறார்களே என கேட்டதற்கு, "உண்மையில் இதன்மூலம் பெண்களின் விவகாரத்தை குறித்து எழுப்ப முயற்சிக்கிறேன். எனது இந்த முடிவுக்கு பெற்றோர்கள் ஆதரவு அளித்துள்ளனர்" என்றார்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிந்து, திருமணம் முடிந்த பிறகு இரண்டு வாரங்களுக்கு கோவாவுக்கு தேன்நிலவு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : self marriage
ADVERTISEMENT
ADVERTISEMENT