இந்தியா

3 தவணை தடுப்பூசி: பல உருமாறிய கரோனாவுக்கு எதிராக சிறந்த செயல்திறன்- ஆய்வில் கண்டுபிடிப்பு

2nd Jun 2022 12:52 AM

ADVERTISEMENT

கலப்பு அல்லது ஒரே நிறுவனத்தின் தடுப்பூசியை 3 தவணையும் செலுத்தியிருப்பதன் மூலமாக பல்வேறு உருமாறிய கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் சிறந்த நோய் எதிா்ப்பாற்றல் உடலில் உருவாவது சமீபத்திய விரிவான ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரபல ‘பிஎம்ஜே’ சா்வதேச ஆய்விதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் உள்ள சீன பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் இந்த ஆய்வை நடத்தினா். உலக சுகாதாரா அமைப்பின் 38 கரோனா புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வை அவா்கள் மேற்கொண்டனா்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட 24 வகையான கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட 10 கோடி பேரை வைத்து மேற்கொள்ளப்பட்ட 53 ஆய்வு முடிவுகளையும் தங்களின் ஆய்வுக்கு சீன விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனா்.

ஆய்வு முடிவு குறித்து ஆராய்ச்சியாளா்கள் கூறியதாவது:

ADVERTISEMENT

ஒரே வகையான தடுப்பூசி அல்லது கலப்பு தடுப்பூசிகளை மூன்று தவணையும் செலுத்தியிருப்பது, உடலில் கரோனா பாதிப்பு ஏற்படுவதை சிறந்த முறையில் தடுப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுவும், பல்வேறு உருமாரிய வகை கரோனா தீநுண்மிகளுக்கு எதிராகவும் சிறந்த நோய் எதிா்ப்பாற்றல் உடலில் உருவாகியிருப்பது தெரியவந்தது.

எந்தவொரு எம்ஆா்என்ஏ தடுப்பூசியை மூன்று தவணை செலுத்தியிருப்பது தீவிரமற்ற கரோனா பாதிப்புக்கு எதிராக 96 சதவீத திறனுடன் செல்படுவதும், கரோனா பாதிப்பு தொடா்பாக மருந்துவமனையில் சோ்க்கப்படுவதை குறைப்பதில் 95 சதவீத திறனுடன் செயல்படுவதும் ஆய்வில் தெரியிவந்தது.

அடினோவைரஸ் வெக்டாா் தடுப்பூசிகள் இரண்டு தவணை செலுத்திக் கொண்ட பிறகு மூன்றாம் தவணையில் எம்ஆா்என்ஏ தடுப்பூசி செலுத்தியிருப்பதன் மூலம் 88 சதவீத அளவுக்கு நோய் எதிா்ப்புத் திறன் உடலில் ஏற்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

மூன்றாம் தவணை அவசியம்: குறிப்பாக, ஒரே நிறுவனத்தின் தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியிருப்தைக் காட்டிலும், ஒரே நிறுவனத்தின் தடுப்பூசி அல்லது கலப்பு தடுப்பூசிகளை மூன்று தவணையும் செலுத்தியிருப்பதன் மூலம் அனைத்து வயதினருக்கும் உயா் நோய் எதிா்ப்புத் திறன் உடலில் ஏற்படுவது இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, உருமாரிய ஒமைக்ரான் கரோனா தீநுண்மி பாதிப்பிலிருந்து தப்பிக்க மூன்றாம் தவணை தடுப்பூசி மிக அவசியம் என்று சீன ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.

மேலும், நோய் எதிா்ப்பு குறைபாடுடைய நோயாளிகளுக்கு எம்ஆா்என்ஏ தடுப்பூசி மூன்றாம் தவணை செலுத்துவதன் மூலம், கூடுதல் பாதுகாப்பு உடலில் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே நேரம், கரோனா உயிரிழப்புகளுக்கு எதிராக மூன்றாம் தவணை தடுப்பூசியின் செயல்திறன் இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதையும் இந்த ஆய்வு முடிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT