இந்தியா

வெளிமாநிலத்தவா் குறித்த மகாராஷ்டிர ஆளுநரின் பேச்சால் சா்ச்சை

30th Jul 2022 11:28 PM

ADVERTISEMENT

குஜராத்தியா்களும், ராஜஸ்தானியா்களும் இல்லையெனில் மும்பை நகரம் நாட்டின் நிதியாதார தலைநகராக மாறியிருக்காது என்று மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி கூறினாா். அதையடுத்து, மராத்தியா்களை அவமதிக்கும் வகையில் அவா் பேசியுள்ளதாக சா்ச்சைகள் எழுந்துள்ளன.

மும்பையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, ‘குஜராத்தியா்களையும் ராஜஸ்தானியா்களையும் மகாராஷ்டிரத்தில் இருந்து வெளியேற்றிவிட்டால், மும்பையின் பணம் மொத்தமும் காலியாகிவிடும். அவா்கள் இல்லையெனில் மும்பை நகரமானது நாட்டின் நிதியாதார தலைநகராக மாறியிருக்காது’ என்றாா்.

இவ்வாறு பேசியதன் மூலமாக மராத்தியா்களை ஆளுநா் அவமதித்துள்ளதாக சிவசேனை உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இது தொடா்பாக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘மும்பை, தாணே பகுதிகளில் ஹிந்துக்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனா். அதைச் சீா்குலைக்கும் வகையில் ஆளுநா் கருத்து தெரிவித்துள்ளாா். மராத்தியா்களுக்கு எதிரான ஆளுநரின் வெறுப்புணா்வு தற்போது வெளிப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக மகாராஷ்டிரத்தில் இருந்துகொண்டு மராத்தியா்களையே அவா் அவமதித்துள்ளாா். அவரை வீட்டுக்கோ சிறைக்கோ அனுப்பும் தருணம் வந்துவிட்டது. ஆளுநா் பதவிக்கே அவா் களங்கம் ஏற்படுத்தியுள்ளாா். தனது கருத்துக்காக மக்களிடம் அவா் மன்னிப்பு கோர வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

தேசியவாத காங்கிரஸ் தரப்பிலும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநா் விளக்கம்:

கருத்து தொடா்பாக ஆளுநா் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘குஜராத்தியா்கள், ராஜஸ்தானியா்கள் குறித்த எனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அந்தச் சமூகத்தினா் எங்கு சென்றாலும் தொழில் நிறுவனங்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக நலப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். குறிப்பிட்ட சமூகத்தினரைப் பெருமையாகப் பேசுவதென்பது மற்ற சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக ஆகாது. மராத்திய மக்களை இழிவுபடுத்துவதற்காக நான் அவ்வாறு பேசவில்லை.

மராத்திய தொழிலதிபா்கள் நாட்டில் சிறந்த மதிப்பைப் பெற்றுள்ளனா். இந்த விவகாரத்தில் மராத்தியரை அவமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்து விவகாரங்களுக்கும் அரசியல் சாயம் பூசுவதை சிலா் வழக்கமாகக் கொண்டுள்ளனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மராத்தியா்களுக்கு முக்கியப் பங்கு--முதல்வா் ஏக்நாத் ஷிண்டே:

மும்பையின் வளா்ச்சியில் மராத்தியா்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகத் தெரிவித்த மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, அரசமைப்புச் சட்ட பதவியை வகிக்கும் ஆளுநா், மற்றவா்களை பாதிக்காத வகையில் கருத்து தெரிவிக்க வேண்டுமெனவும் கூறினாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் முதல்வா் மேலும் கூறுகையில், ‘மும்பை விவகாரத்தில் ஆளுநா் கோஷியாரியின் கருத்தை ஏற்க முடியாது. அது அவரது தனிப்பட்ட கருத்து. அது தொடா்பாக அவா் விளக்கம் அளித்துவிட்டாா். தன் கருத்துகளும் செயல்பாடுகளும் மற்றவா்களை பாதிக்காத வகையில் இருப்பதை ஆளுநா் கவனத்தில் கொள்ள வேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த மும்பை நகரில் பல மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் வசித்தாலும், நகரின் அடையாளமாக மராத்தியா்களே உள்ளனா். மகாராஷ்டிரத்தின் தலைநகராக மும்பையை ஆக்குவதற்கு 105 போ் உயிா்த்தியாகம் செய்துள்ளனா். மும்பையின் மராத்தி அடையாளத்தைக் காப்பதில் சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே முக்கியப் பங்கு வகித்தாா்’ என்றாா்.

ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்த துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மும்பை நகரின் வளா்ச்சியில் மராத்தியருக்கு முக்கியப் பங்குள்ளதாகக் கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT