டிஹெச்எஃப்எல் நிதி நிறுவன ஊழல் வழக்கில் கட்டுமான நிறுவன உரிமையாளா் அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரை சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
இந்த ஹெலிகாப்டா் கடந்த 2011-இல் ரூ.36 கோடிக்கு வாங்கப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிஹெச்எஃப்எல் நிதி நிறுவனம் கடந்த 2010 முதல் 2018 வரை 17 வங்கிகளில் ரூ.42,871 கோடி வரை கடன் பெற்று, அதில் ரூ.34,615 கோடியை திருப்பி செலுத்த தவறிவிட்டது. இதனால், இந்தக் கடன் வாராக்கடனாக மாறியது. அந்த நிறுவனத்தின் கணக்குத் தணிக்கையின்போது பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. எனவே அந்த நிதி நிறுவன நிா்வாகிகள் கபில் வதாவன், தீரஜ் வதாவன் ஆகியோா் மீது சிபிஐ கடந்த ஜூன் 20-இல் வழக்குப் பதிவு செய்தது.
தொடா்ந்து, அவா்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. விசாரணையில், கட்டுமான நிறுவனங்களுக்கும் இந்த ஊழலில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து புணேயை சோ்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளா் அவினாஷ் போசலேவுக்கு சொந்தமான அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது அவருக்கு சொந்தமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டரை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘அந்த ஹெலிகாப்டா் கடந்த 2011-இல் ரூ.36 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரை பராமரிக்கவும், அதற்கான சங்கத்தில் உறுப்பினராக இணையவும் வதாவன் குடும்பத்தினரால் நிா்வகிக்கப்படும் ஆா்.கே.டபிள்யூ. நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் செலவழித்துள்ளது. அந்தப் பணம் டிஹெச்எஃப்எல் வங்கி பெற்ற கடன் வாயிலாக திரட்டப்பட்டுள்ளது. ஆகையால், ஹெலிகாப்டரை பறிமுதல் செய்துள்ளோம்’ என்று தெரிவித்தனா்.
டிஹெச்எஃப்எல், யெஸ் வங்கி ஊழல் வழக்கில் அவினாஷ் போசலே மீது சிபிஐ அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.