இந்தியா

நீட் சர்ச்சை: மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு!

28th Jul 2022 01:23 PM

ADVERTISEMENT

கேரளத்தில் நீட் தேர்வின்போது மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு கடந்த 17-ஆம் தேதி நடைபெற்றது. இதில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஆயூரில் அமைந்துள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம், அவா்களின் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு தேசிய தோ்வு முகமையால், சோதனையிடும் பணிக்காக அமா்த்தப்பட்ட நிறுவனத்தின் பணியாளா்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், அந்த மாணவிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆசிப் ஆசாத் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், 'எந்த தேர்வாக இருந்தாலும் தேர்வுக்கு சற்றுமுன் நடத்தப்பட்ட இவ்வகையான உடல் பரிசோதனையால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஒருவரின் நினைவாற்றலை அழிக்கும்.

எனவே, நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்குள் சம்மந்தப்பட்ட மாணவிகளுக்கு மட்டும் நீட் மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். 

நாடு முழுவதும் தேர்வுகளை நடத்துவதற்கான பொதுவான நெறிமுறையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். 

மேலும், மாணவிகளுக்கு மத்திய அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நாளை(ஜூலை 29) கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. 

இதையும் படிக்க | நீட் தோ்வில் உள்ளாடைகளை அகற்றக் கூறிய விவகாரம்: கேரளத்தில் மேலும் இருவா் கைது

ADVERTISEMENT
ADVERTISEMENT