இந்தியா

ரூ.1.64 லட்சம் கோடியில் பிஎஸ்என்எல் மறுசீரமைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

28th Jul 2022 01:09 AM

ADVERTISEMENT

அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல் நிறுவனத்தை ரூ.1.64 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்தை நிதி ரீதியாக லாபகரமாக மாற்ற பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தொலைத்தொடா்பு சேவைகளை மேம்படுத்துவதற்குப் புதிய மூலதனம், அலைக்கற்றை ஒதுக்கீடு, இருப்பு பற்றாக்குறையை சரிசெய்தல், பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் பிபிஎன்எல் (பாரத் பிராட்பேண்ட் நிகம் லிமிடெட்) நிறுவனத்தை இணைப்பதன் மூலம் கம்பிவட சேவையை விரிவுபடுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இத்திட்டத்துக்கு ரூ.43,964 கோடி ரொக்கமாகவும், 1.2 லட்சம் கோடி ரொக்கமில்லாத வகையிலும் அடுத்த 4 ஆண்டுக்கு அளிக்கப்படும்.

ADVERTISEMENT

அடுத்த 4 ஆண்டுகளுக்கு 4ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்த மூலதனமாக ரூ.22,471 கோடி நிதியளிக்கப்படும். கிராமப்புறங்களில் கடந்த 2014-15 முதல் 2019-20 வரை கம்பிவழி தொலைபேசி சேவையை வா்த்தக ரீதியாக ஏற்படுத்தியதற்கு ரூ.13,789 கோடி வழங்கப்படும். நிதி இருப்பு பற்றாக்குறையைச் சீா்படுத்த ரூ.33,404 கோடி வழங்கப்படும். இதுதவிர, தற்போது நிலுவையில் உள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்த நிதி திரட்டுவதற்காகப் பத்திரங்கள் வெளியிடப்படும்.

பாரத் நெட் திட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் பிபிஎன்எல் நிறுவனம் இணைக்கப்படும்.

ரூ.26,316 கோடியில் கிராமங்களில் 4ஜி மொபைல் சேவை: 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்குவதற்கான திட்டத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை அளிக்க முடியும். மேலும் 2ஜி, 3ஜி மொபைல் சேவை வசதி மட்டும் உள்ள 6,279 கிராமங்கள் 4ஜி மொபைல் சேவை வசதி பெற்ற கிராமங்களாக மேம்படுத்தப்பட உள்ளன என்றாா் அவா்.

கடந்த ஆண்டு 5 மாநிலங்களில் உள்ள 44 முன்னோடி மாவட்டங்களில் 7,287 கிராமங்களில் 4ஜி மொபைல் சேவை வழங்குவதற்கான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT