புது தில்லி: பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் இன்று நடந்த சபர் பால் பண்ணையில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
2014-க்கு முன் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 40 கோடி லிட்டராக இருந்தது. தற்போது 400 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடந்த 8 ஆண்டுகளாக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகள் தற்போது பலன் அளித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
கரும்பு, மக்காச்சோளம் போன்ற பண்ணை விளைபொருள்களில் இருந்து எத்தனால் பெறப்படுவதால், பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவால், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவியுள்ளது என்றார்.
தற்போது, பெட்ரோலுடன் எத்தனால் கலப்பது 8 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடக்கி வைக்க சென்னை வந்தார் பிரதமர் மோடி
விவசாயம் மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் தேன் உற்பத்தி போன்ற வணிக நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவிப்பதால் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.