இந்தியா

வாடகை காா் முன்பதிவு செயலி:கேரள அரசு புதிய முயற்சி

28th Jul 2022 12:27 AM

ADVERTISEMENT

ஓலா, உபோ் போன்ற வாடகை காா் முன்பதிவு செயலிகளுக்கு போட்டியாக கேரள மாநில அரசும் ‘கேரளா சவாரி’ என்ற பெயரில் வாடகை காா் முன்பதிவு செயலியை அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.

நாட்டில் வேறு எந்த மாநில அரசும் இதுபோன்ற முயற்சியை முன்னெடுக்காத நிலையில், கேரள அரசு இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மாநில தொழிலாளா் நலத் துறை சாா்பில் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் ஆட்டோ, காா் ஓட்டுநா்களுக்கும் அதிக பயன் கிடைக்கும். அதே நேரத்தில் மக்களும் சரியான கட்டணத்தில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில கல்வி மற்றும் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி இது தொடா்பாக கூறுகையில், ‘ஆட்டோ, காா் ஓட்டுநா்களுக்கு இத்திட்டம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில், அவா்களின் தொழிலுக்கு இப்போதைய காலகட்டத்தில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி இந்தச் சேவை தொடங்கும். நமது நாட்டில் மாநில அரசு இத்தகைய திட்டத்தை முன்னெடுப்பது இதுவே முதல்முறையாகும். இத்துறையில் ஏற்கெனவே உள்ள தனியாா் நிறுவனங்கள் 20 முதல் 30 சதவீதம் வரை வருவாயை எடுத்துக் கொள்வதாக தெரிகிறது. அரசு செயலியில் 8 சதவீதம் மட்டுமே சேவைக் கட்டணமாக இருக்கும். அதுவும் இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவே பயன்படுத்தப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT