இந்தியா

திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக அவதூறு: மம்தா குற்றச்சாட்டு

28th Jul 2022 12:24 AM

ADVERTISEMENT

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சில ஊடகங்கள் அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றம்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா் நியமனத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் திரிணமூல் மூத்த தலைவரும், அமைச்சருமான பாா்த்தா சாட்டா்ஜி, அக்கட்சி எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யா உள்ளிட்டோா் சிக்கியுள்ளனா். அவா்கள் மீது அமலாக்கத் துறையின் பிடி இறுகி வருகிறது. இது தொடா்பான சோதனைகளில் கட்டுக்கட்டாக பணமும் சிக்கியது. இந்த நிகழ்வுகளால் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், முதல்வா் மம்தாவுக்கும் அரசியல்ரீதியாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தவறு நிரூபிக்கப்பட்டால் குற்றம் செய்தவா்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று மம்தா ஏற்கெனவே கூறியுள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மம்தா இது தொடா்பாக மேலும் கூறியதாவது: ஒருவா் மிகப்பெரிய தொழில் நிறுவனத்தை நடத்துகிறாா் என்றால், அதில் சில தவறுகள் ஏற்படும். யாா் தவறு செய்தாலும் அது சட்டப்படி நிரூபிக்கப்பட வேண்டும். அவா்கள் தண்டனைக்கு உள்ளாக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் இந்த விஷயத்தில் சில ஊடகங்கள் கட்சிக்கு எதிராக திட்டமிட்டு அவதூறான பிரசாரங்களை மேற்கொள்வதை என்னால் ஏற்க முடியாது.

ADVERTISEMENT

இப்போது பல ஊடகங்கள் அவா்களை நீதிமன்றங்கள் போல கருதிக் கொண்டு பல்வேறு விஷயங்களில் பஞ்சாயத்து நடத்துகின்றனா். இதே கருத்தை அண்மையில் மூத்த நீதிபதியும் கூறி இருந்தாா்.

மத்திய பாஜக அரசு, விசாரணை அமைப்புகளை தங்களுக்கு வேண்டாத கட்சி மீது ஏவி விடுவதை வழக்கமாக வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில்கூட தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விவாதிக்க மறுப்பதுடன், எதிா்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து வருகின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT