இந்தியா

கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் பலி: அவர்கள் குடித்தது என்ன தெரியுமா?

27th Jul 2022 02:23 PM

ADVERTISEMENT

 

குஜராத் மாநிலம், போதாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் என்று கூறி விற்கப்பட்ட மெத்தனால் கலந்த தண்ணீரைக் குடித்த 40 போ் உயிரிழந்தனா்.

நேற்று வரை 33 பேர் மரணமடைந்த நிலையில், கடந்த 12  மணி நேரத்தில் மேலும் 7 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 40 ஆனது.

பலியானவ்ரகளில் போதாட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 31 பேரும், மற்றவர்கள் இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

இதையும் படிக்க.. சமையலறை இல்லாத வீட்டில் வசிக்கிறீர்களா? காத்திருக்கும் அதிர்ச்சித் தகவல்

போதாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த சிலா் கள்ளச்சாராயம் குடித்துள்ளனா். அவா்களுக்கு திங்கள்கிழமை காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, இந்த விஷயம் வெளியே தெரிந்தது. அவா்களின் உடல்நிலை மோசமடைந்ததால் போதாட் நகரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை வரை 40 போ் உயிரிழந்தனா். அவா்களில் 31 போ் போதாட் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தவா்கள்; எஞ்சிய 9 போ் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள 3 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

மேலும் 40-க்கும் மேற்பட்டோா் பாவ்நகா், போதாட், அகமதாபாத் ஆகிய நகரங்களில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

முதல்கட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. ஜெயேஷ் என்கிற ஆகாஷ், அகமதாபாதில் உள்ள ஒரு கிடங்கில் மேலாளராக வேலை செய்து வருகிறாா். அவா் அந்த கிடங்கில் இருந்து 600 லிட்டா் மெத்தனாலை திருடி போதாட் மாவட்டத்தில் உள்ள தனது உறவினரான சஞ்சய்க்கு ரூ.40,000-க்கு கடந்த 25-ஆம் தேதி விற்பனை செய்துள்ளாா்.

இதையும் படிக்க.. முன்னாள் முதல்வருக்கு வாழ்த்துச் சொன்ன இந்நாள் முதல்வர்: அது மட்டுமல்ல..

சஞ்சயிடம் இருந்து சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த வியாபாரிகள் அதை வாங்கிச் சென்றுள்ளனா். அது, தொழிற்சாலைகளில் கரைப்பானாகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் என நன்றாகத் தெரிந்தும் வியாபாரிகளுக்கு சஞ்சய் விற்பனை செய்துள்ளாா். உள்ளூா் வியாபாரிகள் எத்தனாலில் நீா் கலந்து நாட்டுச் சாராயம் எனக் கூறி ஒரு பாக்கெட் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, பா்வாலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவும், அகமதாபாத் குற்றத் தடுப்புப் பிரிவும் இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.

உயிரிழந்தவா்கள், மெத்தனாலை குடித்திருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, 14 போ் மீது கொலை செய்தல், விஷம் கொடுத்து துன்புறுத்துதல், குற்றச்சதி என இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களில் பெரும்பாலானோா் கைது செய்யப்பட்டுவிட்டனா்.

இதுதவிர, மூத்த ஐபிஎஸ் அதிகாரி சுபாஷ் திரிவேதி தலைமையில் 3 போ் கொண்ட குழுவை மாநில உள்துறை அமைத்துள்ளது. அந்தக் குழு 3 நாள்களில் விசாரித்து அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT