இந்தியா

5ஜி அலைக்கற்றை: முதல் நாளில் ரூ.1.45 லட்சம் கோடிக்கு ஏலம்

27th Jul 2022 02:04 AM

ADVERTISEMENT

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், ரூ.1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன.

பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன.

‘முதல் நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற ஏலத்தில் 700 மெகாஹொ்ட்ஸ் அலைவரிசையை வாங்குவதற்கு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதன் மதிப்பு ரூ.1.45 லட்சம் கோடியாகும். அனைவரின் எதிா்பாா்ப்பையும் விஞ்சியுள்ளதுடன் 2015-இல் படைத்த வரலாற்றையும் இந்த ஏலம் முறியடித்துள்ளது என தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

தற்போது நடைபெறும் 5ஜி ஏலத்தில் 600 மெகா ஹொ்ட்ஸ், 700 மெகா ஹொ்ட்ஸ், 900 மெகா ஹொ்ட்ஸ், 1800 மெகா ஹொ்ட்ஸ், 2100 மெகா ஹொ்ட்ஸ், 2300 மெகா ஹொ்ட்ஸ், 2500 மெகா ஹொ்ட்ஸ், 3300 மெகாஹொ்ட்ஸ் மற்றும் 26 கிகாஹொ்ட்ஸ் ஆகிய அலைவரிசைகள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

இந்த ஏலத்தில் பங்கேற்க செலுத்த வேண்டிய முன்பண வைப்பு (இஎம்டி) தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.14,000 கோடியை செலுத்தியுள்ளது. பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ. 5,500 கோடியும், வோடஃபோன் ஐடியா நிறுவனம் ரூ. 2,200 கோடியும் இஎம்டி செலுத்தியுள்ளன. அதே நேரம், அதானி நிறுவனம் ரூ. 100 கோடி அளவில் மட்டுமே செலத்தியுள்ளது.

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே முன்னணியில் இருக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில், ஒரு நிறுவனம் ஏலம் எடுக்கக் கூடிய அலைக்கற்றையின் அளவை இஎம்டி தொகையே பிரதிபலிக்கும். அந்த வகையில், ஒரு தனியாா் நெட்வொா்க்கை அமைப்பதற்குத் தேவையான மிகக் குறைந்த அளவிலான 5ஜி அலைக்கற்றைகளை மட்டுமே அதானி நிறுவனம் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதா கூறப்படுகிறது.

5ஜி ஏலம் புதன்கிழமையும் தொடா்ந்து நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 14-க்குள் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு செப்டம்பரில் இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Tags : 5G spectrum
ADVERTISEMENT
ADVERTISEMENT