இந்தியா

மேக்கேதாட்டு விவகாரம்: பதிலளிக்க அவகாசம் கோரியது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

27th Jul 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

மேக்கேதாட்டு அணை கட்டுமானத் திட்ட அறிக்கை குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் தரப்பில் தாக்கலான மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க அவகாசம் கோரியதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.
 காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருகிறது. கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே மனுதாக்கல் செய்திருந்தது.
 காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானதால், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த ஜூன் 7-ஆம் தேதி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது.
 கடந்த முறை இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் இந்த விவகாரம் தொடர்பாக தத்தமது வாதங்களை முன்வைத்தனர். அப்போது நீதிபதிகள் அமர்வு, "காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எதுவும் எடுக்கப்படுமானால், அது இந்த மனு மீதான முடிவுக்கு உள்பட்டதாக இருக்கும்' என்று வாய்மொழியாக தெரிவித்தனர்.
 அதைத் தொடர்ந்து, இரு மாநிலங்களின் மூத்த வழக்குரைஞர்களும், "இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் சம்பந்தப்பட்ட கூட்டத்தை தள்ளிவைக்க ஆணையத்திடம் கேட்கப்படும்' என்றனர்.
 இதையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தையும் வழக்கில் ஒரு தரப்பாக சேர்க்கும் வகையில், பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு விசாரணை ஜூலை 26-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
 அதன்படி, இந்த மனு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நீதிபதி ஏ.எம். கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 அப்போது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, "சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அவரது தனிப்பட்ட காரணத்தால் வழக்கு விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. தமிழக, கர்நாடக அரசுகள் தரப்பில் தாக்கலான மனுக்களுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தரப்பில் பதில் அளிக்கும் வகையில் அவகாசம் அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
 அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, "காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து அதுவரை விவாதிக்காமல் இருக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
 கர்நாடக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், மற்றொரு மனுதாரர் பி.ஆர் பாண்டியன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் எஸ்.நாகமுத்து ஆகியோர் ஆஜராகினர்.
 இதையடுத்து, காவிர் நீர் மேலாண்மை ஆணையம் பதில் அளிக்கும் வகையில், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT