இந்தியா

மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரம்: ஆக.2-இல் மீண்டும் விசாரணை

27th Jul 2022 03:57 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது 13,500 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காதபட்சத்தில் ஆறு மாத சம்பளத்தை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதன்பேரில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் 2014, செப்டம்பர் 23-இல் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையை விலக்கக் கோரி ஆர்.தன்ராஜ் உள்ளிட்ட 21 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 இதனிடையே, தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், மக்கள் நலப் பணியாளர்களுக்கு ரூ.7,500 மதிப்பூதியத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 முதலாவது எதிர்மனுதாரரான மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் டி.மதிவாணன் தரப்பில் அரசின் முடிவை ஏற்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதேவேளையில், அரசின் முடிவை ஆட்சேபித்து விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூனில் நடைபெற்ற போது நீதிபதிகள் அமர்வு, "இந்த விவகாரத்தில் தமிழக அரசு பணி வழங்க முடிவு எடுத்திருப்பதால், அந்தப் பணியில் சேர விரும்புவோர் சேரலாம். அதேவேளையில் இந்தப் புதிய திட்டத்தை ஆட்சேபிக்கும் பணியாளர்களின் உரிமையும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து இருக்கும்' என்று கூறி, இடையீட்டு மனுவை முடித்துவைத்து சிவில் முறையீட்டு வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைத்திருந்தது.
 ஆக.2-இல் விசாரணை: அதன்படி, இந்த சிவில் முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் விழுப்புரம் தன்ராஜ் தரப்பில் வழக்குரைஞர் ரகுநாத சேதுபதியுடன் ஆஜராகிய வழக்குரைஞர் ஹரிபிரியா பத்மபநாபன், "அரசு அறிவித்துள்ள மதிப்பூதியம் போதுமானதாக இல்லை. இதனால், அரசு தரப்பிலான முன்மொழிவை ஏற்க விரும்பவில்லை' என்றார்.
 தமிழக அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா, "தமிழக அரசு முன்மொழிந்துள்ள திட்டத்தின் கீழ் நிறைய பேர் வேலையில் சேர்ந்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த மக்கள் நலப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டுதான் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது' என்றார்.
 இதையடுத்து, இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்கும் வகையில், விசாரணையை ஆகஸ்ட் 2-ஆம் தேதிக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT