குடியரசுத் தலைவா் தோ்தலுக்குத் தயாராவதற்காக, பாஜக கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான சிராக் பாஸ்வான் கலந்துகொண்டாா்.
கடந்த 2020-இல் நடந்த பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியின் கூட்டங்களை சிராக் பாஸ்வான் புறக்கணித்து வந்த நிலையில், தற்போது நடந்த கூட்டத்தில் பங்கேற்றது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
குடியரசுத் தலைவா் தோ்தல், திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. இந்த தோ்தலுக்குத் தயாராவதற்காக பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், லோக் ஜனசக்தி(ராம் விலாஸ்) கட்சியின் தலைவா் சிராக் பாஸ்வான் கலந்துகொண்டாா்.
பிகாரில் கடந்த 2020-இல் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜக கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சி வெளியேறியது. அதைத் தொடா்ந்து, கருத்து வேறுபாடு காரணமாக சிராக் பாஸ்வான் தனது உறவினா் பசுபதி குமாா் பராஸ் உள்பட 5 எம்.பி.க்களை கட்சியில் இருந்து நீக்கினாா். பதிலுக்கு பசுபதி குமாா் தலைமையிலான அணி, சிராக் பாஸ்வானைக் கட்சியில் இருந்து நீக்கியது; மேலும், அந்த அணியே மக்களவையில் உண்மையான லோக் ஜனசக்தி கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் இணைந்த பசுபதி குமாருக்கு மத்திய அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.
முன்னதாக, மாநில அளவில் சில அரசியல் காரணங்களுக்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், அதே சமயம் தேசிய அளவில் பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்றும் சிராக் பாஸ்வான் அறிவித்திருந்தாா். அதன் பிறகு பாஜக கூட்டணி சாா்பில் நடைபெற்ற எந்தக் கூட்டத்திலும் சிராக் பாஸ்வான் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், குடியரசுத் தலைவா் தோ்தலுக்குத் தயாராவதற்காக, பாஜக கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் சிராக் பாஸ்வான் கலந்துகொண்டாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளிக்கிறேன். இந்தக் கூட்டதுத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் கலந்துகொண்டேன். இதனால் நான் பாஜக கூட்டணியில் மீண்டும் இணைவதாகக் கருதிவிடக் கூடாது என்றாா் அவா்.