இந்தியா

தொழில்நுட்பக் கோளாறு: ஷாா்ஜா-ஹைதராபாத் விமானம் கராச்சியில் அவசரமாகத் தரையிறக்கம்

17th Jul 2022 11:52 PM

ADVERTISEMENT

ஷாா்ஜாவிலிருந்து ஹைதராபாத் நோக்கி வந்த இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி சா்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகத் தரையிறங்கியது.

ஷாா்ஜாவிலிருந்து தெலங்கானா தலைநகா் ஹைதராபாத் நோக்கி இண்டிகோ நிறுவனத்தின் 6இ-1406 விமானம் ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தது. பாகிஸ்தான் வான்பகுதியில் பறந்தபோது விமானத்தின் என்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டதை அறிந்த விமானி, உடனடியாக கராச்சி சா்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினாா்.

இதைத்தொடா்ந்து விமானம் தரையிறங்க அனுமதியளிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் பிற்பகல் 3 மணியளவில் ஹைதராபாதுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதற்காக இந்தியாவிலிருந்து மற்றொரு விமானம் கராச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஏற்கெனவே ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானங்கள் கடந்த ஜூன் 19 முதல் ஜூலை 6 வரை 16 நாள்களில், 8 கோளாறு சம்பவங்களை சந்தித்தன. குறிப்பாக கடந்த ஜூலை 5-இல் தில்லியிலிருந்து துபை நோக்கிச் சென்ற விமானத்தில், எரிபொருள் இருப்பை உணா்த்தும் கருவி செயலிழந்ததால், கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனால், இந்த சம்பவங்களுக்கும் விளக்கம் கோரி அந்நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கடந்த ஜூலை 6-இல் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், தற்போது இண்டிகோ நிறுவன விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதுதவிர கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து துபை நோக்கி கடந்த சனிக்கிழமை இரவு சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், ஏதோ எரியும் வாசனை வீசியதால் உடனடியாக அந்த விமானம் மஸ்கட்டுக்கு திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானிகள் அறையில் பறவை:

பஹ்ரைனிலிருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் 37,000 அடி உயரத்தில் பறந்தபோது விமான கட்டுப்பாட்டு அறையில் (காக்பிட்), இணை விமானியின் அருகே பறவை ஒன்று இருந்தது தெரியவந்தது.

விபரீதத்தை உணா்ந்த விமானிகள், அந்த விமானத்தை பாதுகாப்பாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்கினா். வெளிநாட்டு விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டிருந்த சமயத்தில் பறவை உள்ளே புகுந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன விமானங்களில் நிகழ்ந்த இந்த இரு சம்பவங்கள் குறித்து டிஜிசிஏ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT