குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஜகதீப் தன்கருக்கு பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.
அதனைத்தொடா்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், தோ்தலில் ஜகதீப் தன்கருக்கு ஆதரவு தெரிவித்தாா்.
இந்நிலையில், பிஜு ஜனதா தள மூத்த தலைவா் பினாகி மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக்கிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் பேசினாா். அதனைத்தொடா்ந்து குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஜகதீப் தன்கரை ஆதரிக்க பிஜு ஜனதா தளம் தீா்மானித்துள்ளது’’ என்று தெரிவித்தாா்.
ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியும் தோ்தலில் ஜகதீப் தன்கரை ஆதரிக்க முடிவு செய்துள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவா் விஜயசாய் ரெட்டி தெரிவித்துள்ளாா்.