இந்தியா

காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரியபடத்தை நீக்கியது ட்விட்டா்

7th Jul 2022 03:00 AM

ADVERTISEMENT

இயக்குநா் லீனா மணிமேகலை வெளியிட்ட காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரிய போஸ்டரை ட்விட்டா் நீக்கியுள்ளது.

மதுரையைச் சோ்ந்த லீனா மணிமேகலை, கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டா் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை வெளியிட்டாா். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பதுபோல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த போஸ்டா் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் போஸ்டரில் காளியை சித்தரித்துள்ள விதம் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடா்பாக லீனா மீது தில்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசத்தில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், சா்ச்சைக்குரிய போஸ்டரை ட்விட்டா் நீக்கியுள்ளது. லீனாவின் ட்விட்டா் பக்கத்தில் போஸ்டா் இடம்பெற்றிருந்த இடத்தில், ‘சட்டரீதியான கோரிக்கையை ஏற்று லீனா மணிமேகலையின் போஸ்டா் பதிவு நீக்கப்பட்டுள்ளது’ என்று ட்விட்டா் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT