இந்தியா

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு

தினமணி

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படாத புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற இருநபர் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்தது.
 மேலும், ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டம் சட்ட விதிகளின்படி நடைபெறலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியது.
 சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு எடப்பாடி கே.பழனிசாமி தரப்புக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
 ஒற்றைத் தலைமை விவகாரம்: அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. முன்னதாக, அக்கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற ஒருநபர் அமர்வு, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது.
 இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய இருநபர் அமர்வு, "பொதுக்குழுவை நடத்தலாம்; ஆனால், அறிவிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர பிற எந்தத் தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது' என ஜூன் 23-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
 உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 அந்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இருநபர் அமர்வு பிறப்பித்த உத்தரவானது அதிமுகவின் உள்கட்சி ஜனநாயக செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது.
 மேலும், தற்போதைய தேதியில் மனுதாரர் (இபிஎஸ்) மற்றும் 2-ஆவது எதிர்மனுதாரர் (ஓபிஎஸ்) ஆகியோரது இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆகவே, மனுதாரருக்கு உள்ள அதிகப்படியான ஆதரவு காரணமாக பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டுமென கோரியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், இது தொடர்பாக கூடுதல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
 இதேபோன்று, அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் ஆர்.விஸ்வநாதன், பி.பெஞ்சமின் ஆகியோர் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. மனுதாரர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் வழக்குரைஞர் பாலாஜி ஸ்ரீநிவாஸனுடன் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், எதிர்மனுதாரர் சண்முகம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் மணீந்தர் சிங் ஆகியோர் ஆஜராகினர்.
 மனு மீதான விசாரணையின்போது, மூல வழக்கு குறித்தும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு சி.எஸ்.வைத்தியநாதன் விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து, எதிர்மனுதாரர் தரப்பில் மணீந்தர் சிங், "2017 முதல் 5 ஆண்டுகள் வரை கட்சியில் இரட்டைத் தலைமை சுமுகமாகவே சென்றது. ஆனால், ஒற்றைத் தலைமை பதவியை அடைவதற்காகவே மனுதாரர் இந்த விவகாரத்தை பூதாகரமாக ஆக்கியுள்ளார்' என்று வாதிட்டார். மேலும், "பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்த ஒற்றை நீதிபதி அமர்வு, அதற்கான எந்தவொரு காரணத்தையும் பதிவு செய்யவில்லை' என்றார்.

பொதுக்குழுவுக்கு தடையில்லை: இருதரப்பு வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கின் உண்மைகள், சந்தர்ப்ப சூழல்கள், மேல்முறையீட்டு மனு மீதான பொருள், இந்த விவகாரத்தில் மூல மனு மீது ஒற்றை நீதிபதி ஜூன் 22-இல் பிறப்பித்த உத்தரவு விஷயங்கள், அதேபோன்று, மேல்முறையீட்டு மனுக்கள் மீது உயர்நீதிமன்ற இருநபர் அமர்வு ஜூன் 23-இல் பிறப்பித்த உத்தரவு விஷயங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
 அதன்படி, உயர்நீதிமன்ற இருநபர் அமர்வு பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஜூன் 23-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் ஏற்கெனவே நடந்துவிட்டபோதிலும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் அல்லது நடைபெறவுள்ள விஷயங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்ற இருநபர் அமர்வு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக மேல்முறையீட்டு மனுக்களில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளைக் கருத்தில்கொள்ளும் போது, அந்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையானது உச்சநீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.
 ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்படவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை சட்டப்படி நடத்தலாம். அது தவிர பிற விஷயங்கள் தொடர்பாக ஏதாவது இடைக்கால நிவாரணம் தேவைப்பட்டால், சிவில் வழக்கை கையாளும் ஒற்றை நீதிபதி முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
 இதர உத்தரவு ஏதும் பிறப்பிக்கும் தேவை இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மற்ற அனைத்து அம்சங்களும் உரிய கட்டத்தில் ஆய்வு செய்யப்படும். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது எதிர்மனுதாரர்கள் தங்களது பதிலை 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு வழக்குப் பட்டியலிடப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை மதிப்போம்
 சென்னை, ஜூலை 6: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை மதிப்போம் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினார்.
 சென்னையில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 உச்சநீதிமன்றம் எங்களுக்கு எதிராக தீர்ப்பு கூறவில்லை. உயர்நீதிமன்றத்தைத்தான் நாட கூறியுள்ளது. உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை மதிப்போம் என்றார் வைத்திலிங்கம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT