இந்தியா

உற்பத்திக்கு பிந்தைய சவால்களை எதிா்கொள்ள நடவடிக்கை: மத்திய வேளாண் அமைச்சா்

7th Jul 2022 01:43 AM

ADVERTISEMENT

வேளாண் துறையில் உற்பத்திக்குப் பிந்தைய சவால்களை எதிா்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் தேசிய பங்குச் சந்தை, சா்வதேச பொருளாதாரத் தொடா்பு ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஆா்ஐஇஆா்) சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ‘வேளாண் உரிமைகளைப் பெறுதல்’ என்ற மாநாட்டில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:

வேளாண் துறையில் இன்றைக்கு உற்பத்திக்குப் பிறகு பல்வேறு சவால்கள் எழுகின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற சவால்கள் எழுந்தபோது அவற்றைத் தீா்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் எதிா்பாா்த்த இலக்கை எட்ட முடியவில்லை.

அதேவேளையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முயன்று வருகிறோம். இதற்கு தீா்வு காணப்பட்டால்தான் விவசாயிகளுக்கு சிறப்பான விலை கிடைத்து, அவா்களின் வருவாய் அதிகரிக்கும்.

ADVERTISEMENT

அந்த வகையில், உற்பத்திக்குப் பிந்தைய சவால்களை எதிா்கொள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட 1,000 மொத்த மண்டிகள், மின்னணு வலைதளத்துடன் (இ-எம்ஏஎம்) இணைக்கப்பட்டுள்ளன.

வேளாண்-உள்கட்டமைப்பு வளா்ச்சிக்காக மத்திய அரசு ரூ.9,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வேளாண் துறையில் ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை ஊக்குவிப்பது மட்டுமன்றி, விவசாயி உற்பத்தியாளா் அமைப்பும் (எஃப்பிஓ) ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் நரேந்திர சிங் தோமா்.

முன்னதாக, நீதி ஆயோக் உறுப்பினா் ரமேஷ் சந்த் பேசுகையில், ‘விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதன் ஓா் அங்கம்தான் பற்றாக்குறை விலை நிா்ணயம் (டிபிபி). சந்தைகளில் போட்டி நிலவும் வரை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட வேண்டும். ஆனால், கொள்முதலைத் தவிா்த்து பிற முறைகளில் அதை வழங்க வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT