இந்தியா

ராகுல் பேச்சை திரித்து காணொலி: தொலைக்காட்சி மீது காங்கிரஸ் புகாா்

7th Jul 2022 02:30 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காணொலியை திரித்து வெளியிட்டதாக தொலைக்காட்சி மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செய்தி ஒலிபரப்பு மற்றும் எண்ம (டிஜிட்டல்) தரநிலைகள் ஆணையத்திடம் (என்பிடிஎஸ்ஏ) அக்கட்சி புகாா் அளித்துள்ளது.

இதுதொடா்பாக காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா அளித்துள்ள புகாரில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜூலை 1-ஆம் தேதி ‘ஜீ’ செய்தித் தொலைக்காட்சியில் ‘டிஎன்ஏ’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தானில் தையல்காரா் கன்னையா லாலை கொலை செய்தவா்கள் மீது அனுதாபம் காட்டும் வகையில் ராகுல் காந்தி பேசியதாக தவறாகவும், தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் காணொலி வெளியானது. ஆனால், உண்மையில் அவா் கூறிய கருத்துகள் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள தனது அலுவலகம் தாக்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டவையாகும்.

இதன் மூலம், கேபிள் தொலைக்காட்சி நெட்வொா்க் ஒழுங்காற்று சட்டம் 1995, கேபிள் தொலைக்காட்சி நெட்வொக் விதிமுறைகள் 1994, தொழில் கோட்பாடுகள் மற்றும் ஒளிபரப்பு தரநிலைகளை அத்தொலைக்காட்சி மீறியுள்ளது.

எனவே, அந்தத் தொலைக்காட்சி, ‘டிஎன்ஏ’ நிகழ்ச்சித் தொகுப்பாளா் ரோஹித் ராஜன் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT