இந்தியா

அருணாசலில் உள்ளாட்சி இடைத்தேர்தல்: 102 இடங்களில் போட்டியின்றி பாஜக வெற்றி

7th Jul 2022 04:01 AM

ADVERTISEMENT

அருணாசல பிரதேச மாநிலத்தில் அடுத்த வாரம் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் பாஜக அரசு 130 இடங்களில் 102 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து மாநில பஞ்சாயத்துத் துறை அமைச்சர் பமாங் ஃபெலிக்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அருணாசல பிரதேச மாநிலத்தில் 130 ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், ஒரு மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கும் வரும் 12-ஆம் தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜக போட்டியின்றி ஒருமனதாக 102 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்றார்.
மாநிலத்தில் தவாங், மேற்கு கமேங், கிழக்கு கமேங், பக்கே-கேஷ்ஷங், கம்லே, அப்பர் சுபன்ஸ்ரீ, மேற்கு சியாங், அப்பர் சியாங், நம்சாய், சியாங், கீழ் சியாங், திராப், ஜங்க்லாங், லாங்திங் ஆகிய 14 மாவட்டங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.), சுயேச்சைகள் மீதம் உள்ள இடங்களில் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.
குருங்குமே மாவட்டத்தில் பாஜக 5 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சி ஓரிடத்தையும் பிடித்தது. கிரா தாதியில் காங்கிரஸ் ஓர் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியைப் போட்டியின்றித் தக்கவைத்துக் கொண்டது. மீதம் நான்கு இடங்களை பாஜக கைப்பற்றியது. ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் 102 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.
முதல்வர் பெமா காண்டு வாழ்த்து: மாநிலத்தில் 130 இடங்களுக்கான ஊராட்சி மன்ற உறுப்பினர் இடைத்தேர்தலில் பாஜக 102 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஆதரவளித்த ஆதரவாளர்கள், தொண்டர்கள், வெற்றி பெற்றவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு: முதல்வர் பெமா காண்டு தலைமையின் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். மக்களின் தேவைகளை நிறைவேற்ற அவர் ஓய்வின்றிப் பணியாற்றி வருகிறார் என்றார்.
துணை முதல்வர் செüனா மெயின்: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதும், மாநிலத்தில் முதல்வர் பெமா காண்டு அரசு மீதும் மக்கள் வைத்துள்ள முழு நம்பிக்கையின் வெளிப்பாடுதான் இந்த வெற்றி என்றார்.
 

Tags : BJP
ADVERTISEMENT
ADVERTISEMENT