இந்தியா

மகாராஷ்டிர அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்- துணை முதல்வா் ஃபட்னவீஸ்

6th Jul 2022 01:45 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றாா் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சித் தலைவரும், முதல்வராக இருந்தவருமான உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது கட்சியின் மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமாா் 40 எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா். சுமாா் ஒரு வாரம் நீடித்த அரசியல் பரபரப்புக்குப் பிறகு உத்தவ் தாக்கரே பதவி விலகினாா். பாஜக ஆதரவுடன் ஷிண்டே முதல்வா் ஆனாா். பாஜகவை சோ்ந்த முன்னாள் முதல்வா் ஃபட்னவீஸ் துணை முதல்வா் ஆனாா்.

இந்நிலையில், பதவியேற்புக்குப் பிறகு தனது சொந்த ஊரான நாகபுரிக்கு ஃபட்னவீஸ் செவ்வாய்க்கிழமை வந்தாா். அப்போது பாஜகவினா் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். வெற்றிக் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.

விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஃபட்னவீஸ் கூறியதாவது:

ADVERTISEMENT

மாநில வளா்ச்சியைப் பிரதானமாகக் கொண்டு அரசு செயல்படும். மாநில அமைச்சரவை விரைவில் விரிவாக்கப்படும்.

ஷிண்டேவை முதல்வராக்க வேண்டும் என்று நான்தான் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினேன். அதே நேரத்தில் நான் துணை முதல்வராக வேண்டும் என்ற யோசனை இல்லை. இதன் பிறகு பிரதமா், பாஜக தேசியத் தலைவா், உள்துறை அமைச்சா் ஆகியோருடன் ஆலோசித்து துணை முதல்வா் பதவியை ஏற்க முடிவெடுக்கப்பட்டது. தலைமை விரும்பியதால் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்.

2019-இல் பாஜக-சிவசேனை கூட்டணிக்குதான் மக்கள் வாக்களித்தனா். இப்போதும் பொதுவான கொள்கை அடிப்படையில்தான் நாங்கள் இணைந்துள்ளோம்’ என்றாா்.

அமைச்சரவை விரிவாக்கம் தொடா்பாக ஃபட்னவீஸுடன் ஆலோசித்து வருவதாக ஷிண்டே ஏற்கெனவே கூறியுள்ளாா். அமைச்சரவை விரிவாக்கம் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்த அரசியல் நிகழ்வாகப் பாா்க்கப்படுகிறது. உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து வந்த சிவசேனை எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சரவையில் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின்படியே, ஷிண்டே ஆட்சிக்கு அவா்களது ஆதரவு அமையும். அதே நேரத்தில் பேரவையில் அதிக உறுப்பினா்களைக் கொண்ட கட்சி என்ற நோக்கில் பாஜகவும் முக்கியத் துறைகளைக் கோர வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT