இந்தியா

லீனா மணிமேகலைக்கு ஆதரவா? திரிணமூல் எம்.பி. மீது வழக்குப்பதிவு!

DIN

'காளி'  ஆவணப்படம் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது போபால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கனடாவில் வசித்து வரும் மதுரையைச் சேர்ந்த லீனா மணிமேகலை, தான் இயக்கியுள்ள 'காளி' படத்தின் போஸ்டரை கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி புகைப்பிடிப்பது போலவும் மற்றொரு கையில் 'பால் புதுமையினரின்(LGBTQ) கொடியை வைத்திருப்பது போலவும் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லீனா மணிமேகலைக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தில்லி, உத்தரபிரதேச காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இந்நிலையில் தனியார் செய்தி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா, 'சிக்கிம், பூட்டான் ஆகிய பகுதிகளுக்குச் சென்றால் காளிக்கு மதுவை வழங்குவார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சென்று கடவுளுக்கு பிரசாதமாக மது வழங்க வேண்டும் என்று கூறினால் அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். 

மக்கள் தங்கள் தெய்வத்தை அவர்கள் விரும்பும் விதத்தில் கற்பனை செய்ய உரிமை உண்டு. 

என்னைப் பொருத்தவரை காளி, மது மற்றும் மாமிசத்தை ஏற்றுக்கொள்பவள். நானும் காளியை வணங்குபவள்தான். எனக்கு விருப்பப்பட்ட வழியில் நான் கற்பனை செய்துகொள்கிறேன். அதுவே என்னுடைய சுதந்திரம்.

மேற்குவங்கத்தில் உள்ள எங்கள் காளி கோயிலுக்கு வந்து பாருங்கள், காளிக்கு என்ன உணவு வழங்குகிறார்கள் என்று' எனப் பேசியுள்ளார். 

இதையடுத்து  மஹுவா மொய்த்ராவுக்கு எதிராகவும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றன. 

பின்னர் இதுகுறித்து விளக்கமளித்துள்ள  மஹுவா மொய்த்ரா, 'நான் எந்தப் படத்தையோ அல்லது போஸ்டரையோ ஆதரிக்கவில்லை. புகைபிடித்தல் என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. மேற்குவங்கத்தில் உள்ள காளி கோயிலில் மது, மாமிசம் படைக்கப்படும் என்பதைத்தான் கூறினேன்' என்று கூறியுள்ளார். 

இதையடுத்து புகாரின் பேரில், மத உணர்வுகளை புண்படுத்தியதாக, மொய்த்ரா மீது போபால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் இன்று பிற்பகல் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நான் காளி வழிபாடு செய்பவள். நான் எதற்கும் பயப்படவில்லை. உங்கள் அறிவற்றவர்களுக்காகவோ உங்கள் குண்டர்களுக்காகவோ உங்கள் காவல்துறைக்கோ குறிப்பாக உங்கள் விமர்சனங்களுக்கோ நான் பயப்படவில்லை. 

உண்மைக்கு ஆதரவு சக்திகள் தேவையில்லை' என்று பதிவிட்டுள்ளார். 

லீனா மணிமேகலையைத் தொடர்ந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் கருத்துகளும் சர்ச்சை கிளப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT