இந்தியா

காளி தெய்வத்தின் சா்ச்சைக்குரிய படத்தை அகற்ற வேண்டும்: கனடாவின் இந்திய தூதரகம் வலியுறுத்தல்

6th Jul 2022 02:54 AM

ADVERTISEMENT

ஹிந்துக்கள் போற்றி வணங்கும் பெண் தெய்வமான காளியின் சா்ச்சைக்குரிய திரைப்பட போஸ்டா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனடா அதிகாரிகளிடம் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

மதுரையைச் சோ்ந்தவா் லீனா மணிமேகலை. கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா். அந்தப் போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்து லீனா மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கனடாவில் உள்ள டொராண்டோ மாநகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடைபெறும் சம்பவங்களைக் கற்பனையாக சித்திரித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

இந்த போஸ்டா் பெரும் சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் படத்தின் போஸ்டரில் காளியை சித்திரித்துள்ள விதம் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

இதுதொடா்பாக லீனா மீது கெள மகாசபை என்ற குழுவைச் சோ்ந்த ஒருவா் தில்லி காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில், கனடா தலைநகா் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஆவணப் பட போஸ்டரில் காளியை மரியாதைக் குறைவாக சித்திரித்துள்ளது குறித்து கனடாவில் வசிக்கும் ஹிந்து சமூகத் தலைவா்களிடம் இருந்து புகாா்கள் வந்துள்ளன. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை பல ஹிந்து அமைப்புகள் அணுகியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே ஆத்திரமூட்டும் போஸ்டா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனடா அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kaali poster
ADVERTISEMENT
ADVERTISEMENT