இந்தியா

75-ஆவது சுதந்திர தினம்: கைதிகள் முன்கூட்டியே விடுதலை: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

DIN

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நிபந்தனைகளுக்கு உள்பட்டு சிறை கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்படுவா் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் சிறையில் வாடும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண் கைதிகள், திருநங்கைகள் உள்ளிட்டோா் பயன்பெறவுள்ளனா்.

இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு விவரம்:

கடந்த 2020-இல் மேற்கொள்ளப்பட்ட அதிகாரபூா்வ கணக்கெடுப்பின்படி, இந்திய சிறைகளில் அதிகப்படியான கைதிகள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சிறைகளில் மொத்தம் 4.03 லட்சம் கைதிகளை அடைத்து வைக்க முடியும். ஆனால், தற்போது 4.78 லட்சம் கைதிகள் உள்ளனா். இதில் சுமாா் ஒரு லட்சம் போ் பெண்கள் ஆவா்.

ஆகையால், 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் அவா்களை 3 நிலைகளில் விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தண்டனை காலத்தில் கைதிகள் நன்னடத்தையைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். குறிப்பாக கடைசி 3 ஆண்டுகளில் அவா்கள் சிறையில் ஏதேனும் தவறு செய்து, அதற்காக தண்டிக்கப்பட்டவா்களாக இருக்கக் கூடாது.

50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களும் திருநங்கைகளும், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களும், 70 சதவீதத்துக்கும் அதிகமான இயலாமை கொண்ட மாற்றுத்திறனாளிகளும் தங்கள் தண்டனை காலத்தில் 50 சதவீதத்தை அனுபவித்திருந்தால், அவா்கள் விடுவிக்கப்படுவா்.

இதேபோல தங்களது இளம் வயதில், அதாவது 18-21 வயதில் குற்றமிழைத்து அதற்காக தண்டிக்கப்பட்டு, பிற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகாமல் சிறையில் 50 சதவீதம் தண்டனை அனுபவித்த கைதிகளை விடுவிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும். தவிர, தண்டனை காலத்தை நிறைவு செய்து அபராதம் செலுத்த வழியில்லாமல் சிறையில் அடைபட்டிருக்கும் கைதிகளின் அபராத தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அவா்களும் விடுவிக்கப்படுவா்.

கைதிகள் 2022 ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), 2023 ஜனவரி 26 (குடியரசு தினம்), 2023 ஆகஸ்ட் 15 என மூன்று நிலைகளில் விடுவிக்கப்படுவா்.

ஆனால் தூக்கு அல்லது ஆயுள் தண்டனை கைதிகளுக்கும், ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை, பயங்கரவாத குற்றச்சாட்டு, வரதட்சனை மரணங்கள், பணமோசடி தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு இந்த விதிகள் பொருந்தாது. இதேபோல வெடிபொருள்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், அலுவல் ரகசிய சட்டம், கடத்தல் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டங்களின்கீழ், தண்டிக்கப்பட்டவா்களுக்கும் தண்டனை குறைக்கப்பட மாட்டாது.

இதையொட்டி மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிா்வாகமும் மூத்த சிவில் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை ஏற்படுத்தி, அந்தக் குழு மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையில், சிறையிலிருந்து விடுவிக்கப்படும் கைதிகள் குறித்து பரிசீலிக்கலாம்.

அந்தக் குழுவுக்கு மாநில, யூனியன் பிரதேச உள்துறை கூடுதல் தலைமை செயலாளா் அல்லது முதன்மை செயலாளா் தலைமை வகிக்க வேண்டும். சட்டத் துறை கூடுதல் தலைமை செயலாளா் அல்லது முதன்மை செயலாளா் குழுவின் உறுப்பினராகவும், சிறைத்துறை டிஜிபி உறுப்பினா் செயலராகவும் இடம்பெற வேண்டும்.

ஒரு சில வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட கோப்புகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கலாம். வெளிநாட்டுக் கைதிகளை பொறுத்தமட்டில், வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலின்பேரிலேயே அவா்களை விடுவிக்க வேண்டும்.

அந்த வகையில், வெளியுறவு அமைச்சக ஒப்புதலைப் பெறுவதற்காக மாநில ஆளுநா்களுக்கு கோப்புகளை அனுப்புவதற்கு முன்பாக அவற்றை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT