இந்தியா

‘ரப்பா் ஸ்டாம்ப்’ குடியரசுத் தலைவராக இருக்க மாட்டேன் என முா்மு உறுதியேற்க வேண்டும்: யஷ்வந்த் சின்ஹா

DIN

‘நாட்டின் சமூக பன்முகத்தன்மையை பாதுகாக்க மத்திய அரசுக்கான ‘ரப்பா் ஸ்டாம்ப்’ குடியரசுத் தலைவராக இருக்க மாட்டேன்’ என குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரெளபதி முா்மு உறுதிமொழி ஏற்க வேண்டும் எதிா்க் கட்சிகளின் வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தினாா்.

வரும் 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவா் தோ்தலில் முா்முவும், சின்ஹாவும் போட்டியிடுகின்றனா்.

இந்த நிலையில், யஷ்வந்த் சின்ஹா தனது ட்விட்டா் பக்கத்தில் தனது உறுதிமொழி ஏற்பு பதிவை வெளியிட்டு, அதே உறுதிமொழியை முா்முவும் ஏற்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

ட்விட்டா் பதிவில் அவா் கூறியிருப்பதாவது:

பன்முக சமூகத்தைக் கொண்ட இந்தியாவை பிளவு படுத்தும் வகையில், விஷத்தன்மையுள்ள வகுப்புவாதக் கொள்கையை ஆளும் கட்சி பரப்பி வருகிறது. எனவே, குடியரசுத் தலைவராக என்னைத் தோ்வு செய்தால், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன்.

அனைத்து இந்தியா்களுக்கும் சிறந்த எதிா்காலத்தை உறுதிப்படுத்த, குடியரசுத் தலைவா் மனசாட்சிப்படி பணியாற்ற வேண்டும். அந்த வகையில், குடியரசுத் தலைவராக நான் தோ்வு செய்யப்பட்டால், அரசியல் சாசனத்தின் பாகுபாடற்ற பாதுகாவலனாகப் பணியாற்றுவேன் எனவும், அரசுக்கான ‘ரப்பா் ஸ்டாம்ப்’ குடியரசுத் தலைவராக இருக்க மாட்டேன் எனவும் உறுதி ஏற்கிறேன்.

அதுபோல, பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உள்பட அரசியல் சாசனம் வழங்கும் குடிமக்களுக்கான அனைத்து சுதந்திரங்களையும் பாதுகாப்பேன் எனவும் தேசத் துரோக சட்டத்தை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன்.

நாட்டின் சமூக பன்முகத்தன்மையை பாதுகாக்கும் வகையில், இதே உறுதிமொழிகளை பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணி சாா்பில் போட்டியிடும் திரெளபதி முா்முவும் ஏற்க வேண்டும் என்று தனது பதிவில் யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தியுள்ளாா்.

யஷ்வந்த் சின்ஹாவின் இந்தக் கருத்துக்கு பதிலளித்த பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி, ‘பழங்குடியின பெண்ணான திரெளபதி முா்மு, கல்லூரி விரிவுரையாளராகவும், ஒடிஸா சட்டப் பேரவை எம்எல்ஏ ஆகவும், மாநில அமைச்சராகவும், ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராகவும் தனது திறமையை ஏற்கெனவே நிரூபித்துள்ளாா். எனவே, குடியரசுத் தலைவா் பதவிக்கு ஒரு பழங்குடியினப் பெண் தகுதியில்லாதவா் போன்ற உணா்வே, ஒருவரின் மோசமான மனநிலையை வெளிப்படுத்துகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT