இந்தியா

கைப்பேசி 'ஜாமர்': மத்திய அரசு எச்சரிக்கை

5th Jul 2022 08:35 AM | நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

புது தில்லி: கைப்பேசி உள்ளிட்ட வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களின் சிக்னல்களை செயலிழக்கச் செய்யும் கருவிகளை (ஜாமர்கள்) பயன்படுத்துவது சட்டவிரோதம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

வணிகப் போட்டியின் காரணமாக, இந்த ஜாமர்களை அங்கீகாரமற்றவர்கள் பயன்படுத்தினாலோ விற்பனை செய்தாலோ சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தகவல் தொடர்பு சிக்னலை செயலிழக்கச் செய்யும் கருவிகள், பூஸ்டர்களை முறையாகப் பயன்படுத்துவது குறித்த அறிவுறுத்தலையும் தொலைத்தொடர்புத் துறை ஜூலை 1-ஆம் தேதி வெளியிட்டது.

2ஜி, 3ஜி, 4ஜி போன்ற செல்லுலார் தகவல் தொடர்பு சிக்னல்களையும், ஜிபிஎஸ் போன்ற வலுவான ரேடியோ ஆற்றலை வெளிப்படுத்தும் தகவல் தொடர்பு சாதனங்களின் சிக்னல்களை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள் உள்ளன. இத்தகைய கருவிகள் மத்திய பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர், ராணுவத்தினர் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், முக்கிய அலுவலகங்களில் பயன்படுத்துவது வழக்கம். மேலும், பல்வேறு வகையான தேர்வு நடத்தும் மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கும் பயன்படுத்த அனுமதி உண்டு.

ADVERTISEMENT

ஆனால், வணிக ரீதியாக இடையூறு செய்யும் நோக்கத்துடனும் அல்லது வேறு சில காரணங்களுக்கும் சிக்னல்களை செயலிழக்கச் செய்ய ஜாமர்களை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசுக்கு புகார்கள் வந்தன. தொலைத்தொடர்பு சாதனங்களை முடக்க திட்டமிடும் இத்தகைய செயல்களால் பொதுமக்களும் பாதிக்கப்படுவதும், அவர்களுக்கு தங்களுடைய கைப்பேசிகள், வைஃபை போன்ற வயர்லெஸ் கருவிகள் முடக்கும் செயல்களை அறியாது இருப்பதும் தெரியவந்தது.

இத்தகைய நுகர்வோர் தங்களுடைய தொலைபேசி சேவை நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டும் நிலையில் இருந்தனர். இந்த நிலையில் அரசுக்கு இந்த இடையூறு விவகாரங்கள் தெரியவந்து தொலைத்தொடர்புத் துறை பொது அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசின் அனுமதியில்லாமல், கைப்பேசி தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் உள்ளிட்ட இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தொலைத் தொடர்புத் துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்தியாவில் தகவல் தொடர்பை செயலிழக்கச் செய்யும் ஜாமர் உள்ளிட்ட கருவிகளை கொள்முதல் செய்ய முடியாது. இதுகுறித்து விளம்பரம் செய்வதோ, நேரடியாகவோ, மின்னணு வர்த்தகம் மூலமோ விற்பனை, விநியோகம், இறக்குமதி போன்றவற்றில் ஈடுபடுவது சட்டவிரோதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கைப்பேசி உள்ளிட்ட வயர்லெஸ் தகவல் தொடர்பு சாதனங்களின் சிக்னல்களை வேகப்படுத்தும் பூஸ்டர்கள் போன்ற சாதனங்களுக்கும் இதே மாதிரியான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூஸ்டர்களின் பயன்பாடு கைப்பேசி பயன்படுத்துவோரின் பொது சுகாதாரத்துக்கு ஆபத்தை உருவாக்குவதோடு தொலைத்தொடர்பு சேவைகளையும் சீர்குலைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சிக்னல் பூஸ்டர்களை உரிமம் பெற்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களைத் தவிர இதர நிறுவனங்களோ அல்லது தனிநபரோ வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT