இந்தியா

தோஷம் உள்ளதாகக் கூறி ரூ.37 லட்சம் ஏமாற்றிய போலி சாதுக்கள் கைது

5th Jul 2022 05:29 PM

ADVERTISEMENT

 

தோஷம் என்ற பெயரில் ஒரு நபரிடம் ரூ.37 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த போலி சாதுக்கள் கும்பலை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி சாதுக்கள் வேடமிட்டு மனநலம் குன்றியவர்களைத்தேடி குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரிந்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களிடம் தங்களுக்கு சர்ப்ப தோஷம், நாகதோஷம் என சிலவகையான தோஷங்கள் இருப்பதாகவும், அவற்றைப் போக்க அமானுஷ்ய பூஜை ஒன்று செய்யவேண்டும் என்று அவர்களிடமிருந்து பெரும் தொகையை வசூலித்து வந்துள்ளனர். 

அந்தவகையில், போலி சாதுக்கள் கும்பலிடம் சிக்கியவர் தான் கொண்டல் ரெட்டி. கடந்த 2020 நவம்பரில் ரெட்டி ஒரு பாம்பைக் கண்டதால் பயந்து, இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையடுத்து, அவரது அலுவலகத்திற்கு பிச்சை எடுக்கச் சென்ற சஞ்சுநாத் மற்றும் கோரக்நாத் ஆகியோர் அவரது காயம் குறித்து விசாரித்தனர். நடந்த சம்பவத்தை ரெட்டி கூறுகையில், அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும், அதிலிருந்து வெளியேவர பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் அவரது வீட்டிற்குச் சென்று சில பூஜைகள் செய்து ரெட்டியிடம் ரூ.41,000 வசூலித்துள்ளனர். பின்னர், ஏதாவது சாக்குப்போக்கு கூறி அவரை தொடர்ந்து ஏமாற்றினர். பிப்ரவரி 2022 வரை அவரிடம் இருந்து ரூ.37.71 லட்சம் வரை வசூலித்துள்ளனர். 

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஹவாலா முகவர்களிடம் டெபாசிட் செய்து பணத்தை சஞ்சுநாத் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மாற்றினர். இதையடுத்து, போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வரும் கொண்டல் ரெட்டி அளித்த புகாரின் பேரில் போலி சாதுக்கள் கும்பலைச் சேர்ந்த ராம்நாத் (40), ஜோனட்ஜ் (33), கோவிந்த்நாத் (25), அர்ஜுன்நாத் (22), புனரம் (37), வஸ்னா ராம் (22), பிரகாஷ் ஜோதா (27) ஆகியோரை சிறப்பு அதிரடிப்படையினரின் கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

குற்றவாளிகளிடம் இருந்து ரூ.8.30 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 12 செல்போன்கள், ருத்ராட்ச மாலைகள், கமண்டலம், பணம் எண்ணும் இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT