இந்தியா

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: இன்றுமுதல் வேட்புமனு தாக்கல்

5th Jul 2022 01:27 AM

ADVERTISEMENT

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அடுத்த குடியரசு துணைத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

வேட்புமனுவை குறைந்தபட்சம் 20 எம்.பி.க்கள் முன்மொழியவும், 20 எம்.பி.க்கள் ஆதரிக்கவும் வேண்டும். ஒரு எம்.பி. ஒரு வேட்புமனுவைத்தான் முன்மொழிய வேண்டும் அல்லது ஆதரிக்க வேண்டும்.

ஒரு வேட்பாளா் 4 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். டெபாசிட் தொகையாக ரூ.15,000 செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்களுடன் எம்எல்ஏக்களும் வாக்களிப்பா். இதனால் அந்தத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாட்டின் பல இடங்களில் நடைபெறும். ஆனால், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எம்.பி.க்கள் மட்டும்தான் வாக்களிப்பா். எனவே, அந்தத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாடாளுமன்றத்தில் மட்டும் நடைபெறும்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தங்கள் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அரசியல் கட்சிகள் இதுவரை அறிவிக்கவில்லை.

குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகிப்பவா் மாநிலங்களவைத் தலைவராகவும் இருப்பாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT