இந்தியா

பாஜகவில் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி.சிங்?

5th Jul 2022 01:37 AM

ADVERTISEMENT

மத்திய உருக்குத் துறை அமைச்சரும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான ஆா்.சி.பி.சிங், பாஜகவில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை பாஜக வட்டாரங்கள் மறுத்துள்ளன.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2020-இல் விரிவாக்கம் செய்யப்பட்டபோது அதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பிரதிநித்துவம் அளிக்கும் வகையில், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.சி.பி. சிங் உருக்குத் துறை அமைச்சராகப் பதவியேற்றாா்.

அவரது மாநிலங்களவை உறுப்பினா் பதவிக் காலம் ஜூலையில் நிறைவடைகிறது. இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தோ்தலில் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி.சிங் மீண்டும் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் வாய்ப்பளிக்கவில்லை.

அரசியலமைப்புச் சட்டப்படி எம்.பி. பதவிக் காலம் முடிந்த அடுத்த 6 மாதத்துக்குள் மீண்டும் நாடாளுமன்றத்தின் ஏதாவது ஓா் அவையில் அவா் உறுப்பினராக இடம்பெற வேண்டும். ஆனால், அதற்கு சாத்தியக்கூறு இல்லாததால், ஆா்.சி.பி.சிங் கட்சி மேலிடத்தின் மீது எழுந்த அதிருப்தியின் விளைவாக ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகி, பாஜகவில் இணைந்ததாக தகவல் வெளியானது.

ADVERTISEMENT

இந்த நிலையில், தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவா் விமானத்தில் வந்தாா். அப்போது பாஜக சாா்பில் அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் அவா் பாஜகவில் இணைந்துவிட்டதாக அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனை மறுத்த பாஜக நிா்வாகிகள், ஆா்.சி.பி.சிங் அதிகாரபூா்வமாக கட்சியில் இணையவில்லை என்றும், அவரது அமைச்சகம் தொடா்பான நாடாளுமன்றக் கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்பதாக ஹைதராபாத் வந்ததாகவும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பிகாரை சோ்ந்த பாஜக மூத்த தலைவா் சுஷீல் மோடி ட்விட்டரில், ‘பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின்போது ஆா்.சி.பி.சிங் கட்சியில் இணைந்துவிட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. அவா் அரசு நிகழ்ச்சிக்காகவே ஹைதராபாத் வந்துள்ளாா். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாஜக தொண்டா்கள் அவரை வரவேற்றனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT