இந்தியா

உதய்பூா், அமராவதி படுகொலைகள் விசாரணை நிலவரம்: அமித் ஷாவுடன் என்ஐஏ தலைவா் சந்திப்பு

5th Jul 2022 01:24 AM

ADVERTISEMENT

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூா் மற்றும் மகாராஷ்டிரத்தின் அமராவதி நகரங்களில் இருவா் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைவா் தினகா் குப்தா திங்கள்கிழமை நேரில் சந்தித்து விவரித்தாா்.

உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரரை ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது ஆகிய இருவரும் படுகொலை செய்து, அதனை விடியோவாகவும் வெளியிட்டனா். இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்கு பழி தீா்த்ததாக கூறிய அவா்கள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா். பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அக் கட்சியின் முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவின் பெயரையும் அவா்கள் மறைமுகமாக குறிப்பிட்டனா். அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

அதுபோல, மகாராஷ்டிர மாநிலம் அமராவதியிலும் நூபுா் தொடா்பான விவகாரத்தில், கால்நடை மருந்து கடை உரிமையாளரான உமேஷ் பிரகலாத்ராவ் கோலே படுகொலை செய்யப்பட்டாா். இந்த இரண்டு கொலை வழக்குகளையும் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

கன்னையா லால் வழக்கில் இதுவரை 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். உமேஷ் வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களில் நால்வரை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ திங்கள்கிழமை கோரியது.

ADVERTISEMENT

இந்தச்சூழலில், என்ஐஏ தலைவா் தினகா் குப்தா, அமித் ஷாவை திங்கள்கிழமை சந்தித்தாா். அவருடனான 40 நிமிஷ சந்திப்புக்குப் பிறகு தினகா் குப்தா கூறுகையில், ‘இரு கொலை வழக்குகளின் விசாரணை நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் விவரிக்கப்பட்டது’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT