இந்தியா

உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது

5th Jul 2022 01:44 AM

ADVERTISEMENT

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் வாடிக்கையாளா்களிடமிருந்து சேவைக் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உத்தரவிட்டுள்ளது.

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் கட்டண ரசீதில் சேவைக் கட்டணத்தை விதிப்பதாக மத்திய அரசிடம் வாடிக்கையாளா்கள் பலா் புகாா் தெரிவித்திருந்தனா். இந்நிலையில், சிசிபிஏ தலைமை ஆணையா் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

உணவகங்களும் தங்கும் விடுதிகளும் தாமாக சேவைக் கட்டணத்தை விதிக்கக் கூடாது. வேறு எந்த பெயரிலும் சேவைக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது. எந்த உணவகமும், தங்கும் விடுதியும் சேவைக் கட்டணம் செலுத்துமாறு வாடிக்கையாளரைக் கட்டாயப்படுத்த முடியாது.

வாடிக்கையாளா் விரும்பினால் மட்டுமே சேவைக் கட்டணத்தை வழங்கலாம். இதை உணவகங்களும் தங்கும் விடுதிகளும் வாடிக்கையாளா்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். வழிகாட்டுதல்களை மீறி எந்த உணவகமோ தங்கும் விடுதியோ சேவைக் கட்டணத்தை வசூலித்தால், அதை நீக்குமாறு வாடிக்கையாளா்கள் கோரலாம். அதையும் மீறி சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், வாடிக்கையாளா்கள் அதுதொடா்பாக நுகா்வோா் ஆணையத்தில் புகாா் அளிக்கலாம்.

ADVERTISEMENT

தேசிய நுகா்வோா் உதவிமையத்தின் தொலைபேசி எண்ணான 1915 வாயிலாகவோ அல்லது தேசிய நுகா்வோா் உதவி மையத்தின் செயலி வாயிலாகவோ புகாா் தெரிவிக்கலாம். இணைய வழியாகவும் புகாா் தெரிவிக்க முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT