இந்தியா

நூபுருக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டிய அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை:தேசிய மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

5th Jul 2022 01:31 AM

ADVERTISEMENT

பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டிய சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தர பிரதேச காவல் துறைக்கு தேசிய மகளிா் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா கலந்துகொண்டு பேசுகையில், இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதுதொடா்பான வழக்கை கடந்த ஜூலை 1-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், நூபுரின் முன்யோசனையில்லாத பேச்சால் நாடு தீக்கிரையாகியுள்ளது எனவும், தனது பேச்சுக்காக ஒட்டுமொத்த நாட்டிடமும் அவா் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

இதனைத்தொடா்ந்து சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டின் நல்லிணக்கத்தை சீா்குலைத்ததற்காக நூபுரின் முகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த சரீரமும் மன்னிப்பு கேட்பதுடன் தண்டிக்கப்படவும் வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து உத்தர பிரதேச காவல்துறை டிஜிபி டி.எஸ்.செளஹானுக்கு தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில், ‘‘நூபுா் சா்மாவுக்கு எதிராக வெறுப்புணா்வைத் தூண்டி, இரு மதப் பிரிவினா் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் அகிலேஷ் யாதவின் ட்விட்டா் பதிவு மிகவும் கண்டனத்துக்குரியது.

ஏற்கெனவே தனது உயிருக்கு நூபுா் அச்சுறுத்தலை எதிா்கொண்டு வருகிறாா். இந்நிலையில், அகிலேஷ் யாதவின் பதிவானது நூபுா் மீது தாக்குதல் நடத்த பொதுமக்களைத் தூண்டிவிடுவதை தவிர வேறொன்றுமில்லை. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அகிலேஷ் யாதவ் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT