இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: தில்லியில் வாக்களிக்க முன்பே தகவல் அனுப்பக் கோரிக்கை

3rd Jul 2022 12:53 AM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவா் தோ்தலில், தில்லி சென்றோ, வேறு மாநில பேரவை வளாக வாக்குச் சாவடிகளிலோ வாக்களிக்க விரும்புவோா் அதற்கான தகவலை பத்து நாள்களுக்கு முன்பே தோ்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டுமென தமிழக சட்டப் பேரவைச் செயலாளரும், உதவித் தோ்தல் அதிகாரியுமான கி.சீனிவாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வருகிற 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு தமிழக சட்டப் பேரவைச் செயலக வளாகத்தில் உள்ள குழுக் கூட்ட அறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலை நடத்த பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன், இணைச் செயலாளா் ஆா்.சாந்தி ஆகியோா் உதவித் தோ்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனைவரும் வாக்குப் பதிவு தினத்தன்று, பேரவை வளாகத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டின்படி குழுக் கூட்ட அறை வாக்குச் சாவடியில் வாக்களிக்கலாம். நாடாளுமன்ற உறுப்பினா்கள், பிற மாநில சட்டப் பேரவை உறுப்பினா்களும் இந்திய தோ்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்று பேரவை வளாக வாக்குப் பதிவு அறையில் வாக்கைச் செலுத்தலாம்.

தமிழக சட்டப் பேரவை உறுப்பினா்கள் யாரேனும் தில்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்படும் வாக்குச் சாவடியில் வாக்களிக்க விரும்பினால், அதனை ‘படிவம் ஏ’ மூலமாகத் தெரிவிக்க வேண்டும். பிற மாநில சட்டப் பேரவைச் செயலக வளாகத்தில் அமைக்கப்படும் வாக்குச் சாவடியில் வாக்களிக்க விரும்பினால் அதனை ‘படிவம் பி’ வாயிலாகத் தெரிவிக்க வேண்டும்.

ADVERTISEMENT

நியாயமான காரணங்களுடன் வாக்குப் பதிவு நடைபெறும் தினத்துக்கு (ஜூலை 18) பத்து நாள்களுக்கு முன்பாக இந்தியத் தோ்தல் ஆணையத்தை சென்றடையும் வகையில் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: சுமன்குமாா் தாஸ், செயலாளா், நிா்வச்சன் சதன், அசோகா சாலை, புதுதில்லி-110 001.

இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு விருப்பத்தைத் தெரிவித்த பிறகு, அதுவே இறுதியானது என்பதால், அதனை மாற்ற ஆணையம் அனுமதிக்காது.

அடையாள அட்டை கட்டாயம்: சட்டப் பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்க வரும் போது அவா்கள் தங்களது அடையாள அட்டையை உதவித் தோ்தல் அதிகாரியிடம் காண்பிக்க வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா் கி.சீனிவாசன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT