இந்தியா

பாஜக நிர்வாகியான தீவிரவாதி பிடிபட்டது எப்படி? - அதிர்ச்சி தகவல் அம்பலமானது!

3rd Jul 2022 10:25 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டம், துக்சான் கிராம மக்களால் லஷ்கர் தீவிரவாதியான தலிப் உசேன் ஷாவும் அவரது கூட்டாளியும் சிறைபிடிக்கப்பட்டனர். அதில்  தலிப் உசேன் ஷா பாஜக நிர்வாகி என விசாரணையில் அம்பலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரியாஸி மாவட்டம், துக்சான் கிராமத்தில் பதுங்கி இருந்த தேடப்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி  தலிப் உசேன் ஷா, அவரது கூட்டாளியை ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

சிக்கிய 2 தீவிரவாதிகளிடம் இருந்து 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டதாக ஜம்மு காவல்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.  

ADVERTISEMENT

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மற்றும் காவல்துறைத் தலைவர் ஆகியோர் ரியாசி கிராம மக்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்து அவர்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ளனர்.

ஆயுதங்களுடன் இருந்த தீவிரவாதிகளை மடக்கி பிடித்த துக்சான் கிராம மக்களின் தைரியத்திற்கு வாழ்த்துகள். நான் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன் என காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட உசேன் ஷா மே 9 ஆம் தேதி ஜம்மு பிராந்திய பாஜக சிறுபான்மை பிரிவு சமூக ஊடக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்திர ரைனாவுடன் உசேன் ஷா இருக்கும் படங்கள் ஏராளமான ஊடகங்களில் உள்ளன. 

இதையும் படிக்க | அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலம் தான்: அமித்ஷா பேச்சு

தீவிரவாத செயல்களில் பாஜக நிர்வாகிகள் ஈடுபட்டது குறித்து அக்கட்சி விளக்கம் அளிக்குமா என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரோகன் குப்தா கேள்வி எழுப்பியிருந்தார்.

2 தீவிரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்கள், வெடிப்பொருள்கள்.

இந்நிலையில், இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்.பதானியா கூறுகையில், இந்த கைது நடவடிக்கையால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. "பாஜகவுக்குள் நுழைவதற்கு இது ஒரு புதிய மாதிரியான முயற்சி என்று நான் கூறுவேன். உயர்மட்டத் தலைவர்களை கொல்வதற்கான  சதி திட்டமும் காவல்துறையால் முறியடிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

"எல்லை முழுவதும், பயங்கரவாதத்தை பரப்ப விரும்புபவர்கள் உள்ளனர். இப்போது யார் வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தப்பட்டதே பிரச்னைக்கு காரணம். இது ஒரு பின்னடைவு (குறை) என்று நான் கூறுவேன். ஆன்லைன் மூலம் உறுப்பினர்களாகும் நபர்களின் குற்றவியல் பின்னணி அல்லது முன்பு செய்த செயல்கள் போன்றவற்றை  சரிபார்க்க எந்த அமைப்பும் இல்லாததால்  ஆன்லைனில் உறுப்பினர்களாக சேர்ந்துகொள்கின்றனர்," என்று அவர் விளக்கம் அளித்துள்ளனர்.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT