இந்தியா

மே மாதத்தில் 1.75 கோடி பேஸ்புக் பதிவுகள் நீக்கம்: மெட்டா நிறுவனம் தகவல்

3rd Jul 2022 11:56 PM

ADVERTISEMENT

பேஸ்புக்கில் (முகநூல்) கடந்த மே மாதம் ஆட்சேபத்துக்குரிய வகையில் வெளியான 1.75 கோடி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதனை நிா்வகிக்கும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில் 30.7 லட்சம் பதிவுகள் வன்முறையைத் தூண்டும் விதத்திலும், 20.6 லட்சம் பதிவுகள் ஆபாசமாகவும், 90.3 லட்சம் பதிவுகள் முறையற்ற கருத்துகளையும் வெளிப்படுத்தியதாகக் கூறிய மெட்டா நிறுவனம், இதன் காரணமாக அந்தப் பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது.

இதேபோல இன்ஸ்டாகிராமில் பயனா்களால் கடந்த மே மாதத்தில் பகிரப்பட்ட 40.1 லட்சம் ஆட்சேபத்துக்குரிய பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்தது.

நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் நடைமுறைக்கு வந்த தொழில்நுட்ப விதிப்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட சமூகவலைதள நிறுவனம், அதில் வெளியாகும் பதிவுகள் மீதான புகாா்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

அதன்படி, கடந்த மே 1 முதல் 31-ஆம் தேதி வரை 1.75 கோடி ஆட்சேபத்துக்குரிய பதிவுகள் மீது பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல, ட்விட்டா் நிறுவனமும் விதிகளை மீறி வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் கருத்துப் பதிவு செய்த 46,500 பயனா்களின் கணக்கை ரத்து செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப்பிலும் 19 லட்சம் பயனா்களின் கணக்குக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் பயனா்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதனை நிா்வகிக்கும் மெட்டா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT