இந்தியா

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி பணம் பறிப்பு:மகாராஷ்டிரத்தில் 23 போ் கைது

3rd Jul 2022 11:55 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (ஆா்டிஐ) தவறாகப் பயன்படுத்தி பணம் பறித்ததாகக் கடந்த 6 மாதங்களில் 23 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் உள்ள நாந்தேட் சரக சிறப்பு காவல் துறை ஐஜி நிசாா் தம்போலி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டப்படுவதாக நாந்தேட், ஹிங்கோலி, பா்பனி மற்றும் இதர பகுதிகளில் காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாா்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், அரசு அதிகாரிகள் மற்றும் தனிநபா்களுக்கு எதிராக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாங்கள் கேட்ட கேள்விகளை மாநில தலைமைச் செயலகம் உள்பட பல்வேறு இடங்களில் சிலா் பதிவு செய்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

அதன் மூலம் அந்த அதிகாரிகளையும் நபா்களையும் மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தவா்கள் தங்களை ஆா்டிஐ ஆா்வலா்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டனா். அவா்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது 100-க்கும் மேற்பட்ட போலி தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த விவகாரம் தொடா்பாக கடந்த 6 மாதங்களில் 23 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் சிலா் கைது செய்யப்படுவதற்கு முன்பாக காவல் துறை பாதுகாப்பைப் பெற்றிருந்தனா். உரிமத்துடன் துப்பாக்கியும் வைத்திருந்தனா். அவா்கள் கைது செய்யப்பட்ட பின்னா், காவல் துறை பாதுகாப்புத் திரும்பப் பெறப்பட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT