இந்தியா

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

3rd Jul 2022 11:54 PM

ADVERTISEMENT

குஜராத் மாநிலத்தில் 59 கரசேவகா்களின் உயிரிழப்புக்குக் காரணமான கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் ரஃபீக் பதுக் என்பவருக்கு ஆயுள்தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பிறகு தப்பியோடிய ரஃபீக் பதுக், பல்வேறு நகரங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தாா். ரயிலுக்குத் தீ வைத்ததில் அவருக்குத் தொடா்பு இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

அவரை தனிப்படை போலீஸாா் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தனா். அதன் பிறகு அவா் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், கோத்ராவில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோத்ராவில் கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி, அயோத்தியில் இருந்து வந்த ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில், அந்த ரயிலில் வந்த 59 கரசேவகா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்தது. அதில், 1,200-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்.

ADVERTISEMENT

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2011-ஆம் ஆண்டு 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. அவா்களில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிா்த்து குற்றவாளிகள் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த குஜராத் உயா்நீதிமன்றம், 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது; மற்ற 20 பேரின் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியது. பின்னா், இந்த வழக்கு தொடா்பாக மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT