இந்தியா

ராஜஸ்தானில் நூபுருக்கு ஆதரவாகக் கருத்து பதிவிட்ட தையல்காரா் படுகொலை: சதியில் ஈடுபட்டதாக இருவா் கைது

2nd Jul 2022 03:41 AM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாகக் சமூக ஊடகத்தில் பதிவிட்ட தையல்காரா் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்தவா் தையல்காரா் கன்னையா லால். இவா் குறிப்பிட்ட சமூகத்தினரின் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும், இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு ஆதரவாகவும் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரின் கடைக்கு ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது ஆகிய இருவா் சென்று, கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனா். அந்தக் கொலையை காணொலியாகப் பதிவு செய்து இருவரும் சமூக ஊடகத்தில் வெளியிட்டனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது உள்பட 5 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

கன்னையா லாலின் கொலையை பயங்கரவாத சம்பவமாகக் கருதி, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு உதவியுடன் அந்த அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மாநில காவல் துறை கூடுதல் டிஜிபி அசோக் ரத்தோா் கூறுகையில், ‘‘கன்னையா லால் கொலையில் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, அவரை நோட்டமிட்டு வந்த இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT