இந்தியா

என்னவிதமான சவால்களை நாம் சந்திக்கவில்லை? ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமன்

1st Jul 2022 03:13 PM

ADVERTISEMENT


புது தில்லி: நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மறைமுக வரி விதிப்பில் மிகப் பெரிய மாற்றமாக அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) 5 ஆண்டுகளை நிறைவுசெய்து 6-ஆவது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது.

ஜிஎஸ்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டம் புது தில்லியில் இன்று நடைபெற்றது.

இதையும் படிக்க.. தங்கம் இறக்குமதி வரி உயர்வால் என்னவாகும்? விலை அதிகரிக்குமா?

ADVERTISEMENT

விழாவில், கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக  அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நாம் சந்தித்திருந்தால் கூட, இந்த உற்சாக வரவேற்பை நாம் பார்த்திருப்போம். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜிஎஸ்டி முறை நடைமுறைக்கு கடுமையாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜிஎஸ்டி நடைமுறையில் நாம் என்ன விதமான சவால்களை சந்திக்காமல் இருந்தோம்?

ஜிஎஸ்டி தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் 2019ஆம் ஆண்டு எழுந்தன. வரி செலுத்தும் சமூகத்தை நேரடியாக அழைத்து, ஜிஎஸ்டி அதிகாரிகளுடன் அமர்ந்து பேசி பல சிக்கல்களை சரி செய்தோம்.

மத்திய நேரடி வரிவருவாய் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரி வாரிம் ஆகியவை துரிதமாக செயல்பட்டதால், வரி செலுத்துவோரிடையே நம்பிக்கை ஏற்பட்டது. அவர்களுக்கு, தங்களது கருத்துகளும் ஏற்கப்படுகிறது, மதிக்கப்படுகிறது என்ற எண்ணம் எழுந்தது. மேலும், குழப்பத்தை ஏற்படுத்தும் பல அடுக்கு வரி விதிப்பு நடைமுறை ஒழிந்தது என்றார் நிர்மலா சீதாராமன்.

 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் பேசுகையில், கடந்த ஆண்டுகளில் ஜிஎஸ்டி நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை நாம் பார்த்துவிட்டோம். மத்திய மறைமுக வரி வருவாய் துறை, செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் எப்போதும் மக்களின் ஆலோசனை ஏற்கத் தயாராகவே இருக்கும் என்றார்.

சரக்கு-சேவை வரி 

மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப்பட்டு வந்த கலால் வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) உள்ளிட்ட 17 மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு-சேவை வரி திட்டத்தை மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. புதிய விதிகளின்படி, பொருள்களுக்கும் சேவைகளுக்கும் 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் உள்ளிட்ட ஆபரணங்களுக்கு 3%, 1.5% என சிறப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இவை மட்டுமின்றி 28 சதவீத வரி விதிக்கப்படும் ஆடம்பரப் பொருள்கள் மீது கூடுதலாக செஸ் வரி விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டி காரணமாகப் பல்வேறு பொருள்களின் விலை குறைந்தது. ஜிஎஸ்டி அறிமுகத்துக்கு முன் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் மறைமுக வரி சராசரியாக 31 சதவீதம் வரை இருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வரி பெருமளவில் குறைந்தது. ஆனால், அதன் பலன்கள் மக்களுக்குக் கிடைக்காத வகையில் பல நிறுவனங்கள் பொருள்களைப் பழைய விலைக்கே விற்கும் நோக்கில், அவற்றின் மீதான அடிப்படை விலையை உயா்த்தின. அதன் காரணமாக ஜிஎஸ்டி அமலாக்கம் மக்களை விட நிறுவனங்களுக்கு அதிக பலனைத் தந்ததாகப் பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனா்.

எதிா்ப்பும் ஒப்புதலும்

ஆரம்பத்தில் ஜிஎஸ்டி வாயிலான வருவாய் மிகவும் குறைவாகவே இருந்தது. ஜிஎஸ்டி முறையானது படிப்படியாகவே பலனளிக்கும் என அரசு விளக்கமளித்தது. திட்டம் அமல்படுத்தப்பட்ட சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகே ஜிஎஸ்டி வருவாய் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடியைக் கடந்தது.

அதே வேளையில், ஜிஎஸ்டி அறிமுகத்துக்குப் பல மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. இதன் மூலமாக, மறைமுக வரி விதிக்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்க முயற்சிப்பதாக அவை குற்றஞ்சாட்டின. மேலும் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டால் மாநிலங்களுக்கான வரி வருவாய் பெருமளவில் குறைந்துவிடும் எனவும் அவை புகாா் தெரிவித்தன.

மாநிலங்களை சமாதானப்படுத்தும் வகையில், வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்காக 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. ஆடம்பரப் பொருள்கள் மீது விதிக்கப்படும் செஸ் வரியை மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டது.

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் நடைமுறை நிறைவடைந்துள்ள நிலையில், அதை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமெனப் பல மாநிலங்கள் கோரி வருகின்றன. அதே வேளையில், எரிபொருள்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்து, வரி வசூல் நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்தினால் வருவாய் கூடுதலாக அதிகரித்து நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் எனப் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT