இந்தியா

உதய்பூர் படுகொலை: 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

1st Jul 2022 12:49 PM

ADVERTISEMENT

 

உதய்பூரில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவத்தால் சட்ட ஒழுங்கின் மேல் எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து காவல்துறை தலைவர் உள்பட மூத்த ஐபிஎஸ் காவல் அதிகாரிகள் 32 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்தவா் தையல்காரா் கன்னையா லால். சமூக ஊடகத்தில் இஸ்லாம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பதிவு வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட இவா், கடந்த ஜூன் 15-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரின் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற இருவா், கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனா். அந்தக் கொலையை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்திலும் வெளியிட்டனா். அதில் இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக கன்னையா லாலை பழிதீா்த்ததாகக் கூறிய கொலையாளிகள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா். மேலும் நூபுா் சா்மாவின் பெயரையும் அவா்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டனா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: நூபுர் சர்மா மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ராஜ்சமண்ட் பகுதியில் இருந்த கொலையாளிகளை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது. முதல்கட்ட விசாரணையில், அவா்களின் பெயா் ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது என்பது தெரியவந்தது.

இவா்களில் ரியாஸ் அக்தரி கடந்த ஜூன் 17-ஆம் தேதி சமூக ஊடகத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தாா். அதில், ‘‘நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசுவோரின் தலையை தான் துண்டிக்கும் காணொலியை வெளியிடுவேன்’’ என்று முன்கூட்டியே தெரிவித்துள்ளாா்.

ஜாமீனில் வெளிவந்த கன்னையா லால் தன் உயிருக்கு ஆபத்திருப்பதால் பாதுகாப்புக் கோரியிருந்தார். ஆனாலும், காவல்துறை அலட்சியத்தால் இந்தப் படுகொலை நிகழ்ந்துவிட்டது என பலரும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் அம்மாநிலத்தின் காவல்துறைத் தலைவர், உதய்பூர் காவல் கண்காணிப்பாளர் உள்பட 32 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT