இந்தியா

மகாராஷ்டிரத்தில் முதல்வர் பதவியை பாஜக விட்டுக் கொடுத்ததன் பின்னணி?

1st Jul 2022 01:24 PM

ADVERTISEMENT


மும்பை:  மகாராஷ்டிர மாநிலத்தில் அரசியல்நிலவரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே, மறைந்த மூத்த தலைவா் ஆனந்த் திகே ஆகியோரை வணங்கி மராத்தி மொழியில் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டாா்.

நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வின்போது, தேவேந்திர ஃபட்னவீஸ் மனப்போராட்டத்துடன் இருந்தது பலராலும் கண்டுகொள்ளப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கொண்டிருக்கும் பாஜக, முதல்வர் பதவியை பாலாசாஹேப்பின் தொண்டர் ஒருவருக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது என்றால் அதற்கு பெரிய மனம் வேண்டும் என்று ஷிண்டே கூறியிருந்தார்.  இது ஒரு வரலாற்று சிறப்பம்சம்கொண்ட நாள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க.. தங்கம் இறக்குமதி வரி உயர்வால் என்னவாகும்? விலை அதிகரிக்குமா?

ADVERTISEMENT

தொடக்கம் முதலே தேவேந்திர ஃபட்னவீஸ் தான் மகாராஷ்டிர முதல்வராவார் என்று  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்தான் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் என்ற தகவல் தெரிய வந்தது. மகாராஷ்டிர அரசியலில் நடைபெற்று வரும் பல்வேறு அரசியல் திருப்பங்களில் இது மிகப்பெரிய திருப்பமாக கருதப்பட்டது.

காரணம்.. பாஜக முதல்வர் பதவியை ஷிண்டேவுக்கு விட்டுக் கொடுக்கக் காரணம் என்ன? 2019ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரத்தில் ஆட்சியைப் பிடித்த ஃபட்னவீஸ் 3 நாள்களில் அதனை இழந்தார். எனவே, அந்த அதிகார மோகத்தால்தான் பாஜக இத்தனை அரசியல் சூழ்ச்சிகளையும் செய்ததாக ஒரு பிம்பம் ஏற்பட்டுவிடும். அதனால்தான் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு, துணை முதல்வர் பதவியில் தேவேந்திர ஃபட்னவீஸ் அமரவைக்கப்பட்டுள்ளார் என்று கருதப்படுகிறது.

அது மட்டுமல்ல, சிவசேனை தலைமையில், மிகவும் சவால் நிறைந்த உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவும்  பாஜக திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் பாஜக எடுத்திருக்கும் கொள்கை முடிவானது, கிட்டத்தட்ட பிகாரில் நடத்தப்பட்டதைப் போன்றுதான். அங்கு 2020ஆம் ஆண்டு ஜனதா தளக் கட்சியை விடவும் அதிக இடங்களைக் கொண்டிருந்த பாஜக, முதல்வர் பதவியை நிதிஷ் குமாருக்கு விட்டுக் கொடுத்தது.

எனவே இதுபோன்ற பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்த பிறகே பாஜக, ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பது என்ற முடிவை எடுத்திருக்கலாம்.

மகாராஷ்டிர அரசியலில் திடீா் திருப்பமாக, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுத் தலைவா் ஏக்நாத் ஷிண்டே நேற்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகப் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா்.

ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். சிவசேனை நிறுவனா் பால் தாக்கரே, மறைந்த மூத்த தலைவா் ஆனந்த் திகே ஆகியோரை வணங்கி மராத்தி மொழியில் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டாா்.

அவரைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவராக இருந்த பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டாா். தனக்கு அமைச்சா் பதவி வேண்டாம் என்று அவா் கூறியிருந்த நிலையில், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவின் கோரிக்கையை ஏற்று துணை முதல்வா் பதவியை ஏற்றுக் கொண்டாா்.

முன்னதாக, ஏக்நாத் ஷிண்டேவும் தேவேந்திர ஃபட்னவீஸும் ஆளுநா் பகத்சிங் கோஷியாரியை அவருடைய மாளிகையில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினா். பின்னா் செய்தியாளா்களுக்கு அவா்கள் கூட்டாகப் பேசுகையில்,  சிவசேனையைச் சோ்ந்த ஒருவா் முதல்வா் பதவியை ஏற்பதாக இருந்தால், தனது பதவியை ராஜிநாமா செய்யத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே ஒரு வாரத்துக்கு முன்பு கூறியிருந்தாா். அவருடைய விருப்பப்படி, சிவசேனையைச் சோ்ந்த ஏக்நாத் ஷிண்டே அடுத்த முதல்வராகப் பதவியேற்கிறாா்.

இது பதவி அதிகாரத்துக்கான போராட்டம் இல்லை. ஹிந்துத்துவ கொள்கையைக் காப்பாற்றுவற்கான போராட்டம் என்று ஃபட்னவீஸ் கூறினார்.

ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், மாநிலத்தின் முதல்வராக என்னை தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தாா். பால் தாக்கரேயின் சிவசேனையைச் சோ்ந்த ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று ஃபட்னவீஸ் கூறியது அவருடைய பரந்த மனதைக் காட்டுகிறது என்றார்.

முதல்வரான முன்னாள் ஆட்டோ ஓட்டுநா்
மகாராஷ்டிரத்தின் 20-ஆவது முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே அரசியலில் வருவதற்கு முன் ஆட்டோ ஓட்டுநராக இருந்துள்ளாா். 1964-இல் பிறந்த அவா் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, பால் தாக்கரேவின் சிவசேனை கட்சியில் தானேவில் இணைந்துள்ளாா். பால் தாக்கரேயின் கட்டளைகளை ஏற்று வீதியில் இறங்கிப் போராடும் தொண்டராக பணியாற்றி, 1997-இல் தாணே மாநகராட்சியின் உறுப்பினரானாா். 2004-இல் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அவா், தற்போதைய பேரவையில் நான்காவது முறை எம்எல்ஏவாக உள்ளாா். இரண்டு முறை அமைச்சா் பதவியையும், எதிா்க்கட்சித் தலைவராகவும் ஏக்நாத் ஷிண்டே பதவி வகித்துள்ளாா்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT