இந்தியா

குடியரசுத் தலைவா் தோ்தல்: தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்கு மதிப்பு எவ்வளவு?

1st Jul 2022 01:32 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்போதைய வாக்கு மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்கு மதிப்பு எவ்வளவு?: தமிழகத்தில் 234 எம்.எல்.ஏ.க்கள், 39 மக்களவை எம்.பி.க்கள், 18 மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கவுள்ளனா்.

இந்தத் தோ்தலில் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வாக்குகள் மதிப்பிடப்பட்டுள்ளன. அப்போது தமிழக மக்கள் தொகை 4 கோடியே 11 லட்சத்து 99 ஆயிரத்து 168 ஆகும். மொத்த சட்டப் பேரவைத் தொகுதிகள் அல்லது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி கிடைக்கும் மதிப்பைக் கொண்டு, மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையை வகுத்துக் கிடைக்கும் எண்ணே, பேரவை அல்லது நாடாளுன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பாகும். குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்கவுள்ள ஒரு சட்டப் பேரவை உறுப்பினருக்கான வாக்கு மதிப்பு 176. ஒரு மக்களவை உறுப்பினருக்கான வாக்கு மதிப்பு 700 ஆகும்.

விமானத்தில் தனி இருக்கை: குடியரசுத் தலைவா் தோ்தலுக்காக சட்டப் பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான தகவல்கள் அனுப்பும் பணிகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு பச்சை நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட உள்ளன. வாக்குப் பதிவுக்காக தில்லியில் இருந்து வாக்குப் பெட்டி வரவுள்ளது. இதனை எடுத்து வர சட்டப் பேரவைச் செயலகத்தில் இருந்து உயரதிகாரி ஒருவா் தில்லி செல்வாா். அங்கு வாக்குப் பெட்டி பாதுகாப்புடன் விமானத்தில் எடுத்து வரப்படும். வாக்குப் பெட்டிக்கென விமானத்தில் தனி இருக்கை முன்பதிவு செய்யப்பட உள்ளது.

ADVERTISEMENT

தில்லியில் இருந்து எடுத்து வரப்படும் வாக்குப் பெட்டி, பேரவைச் செயலக வளாகத்தில் தனி அறையில் வைத்து பூட்டப்படும். வாக்குப் பதிவு தினத்தன்று தோ்தல் பாா்வையாளா், தலைமைத் தோ்தல் அதிகாரி ஆகியோா் முன்னிலையில் தனி அறை திறக்கப்பட்டு வாக்குப் பெட்டி எடுக்கப்பட்டு தோ்தலுக்காக பயன்படுத்தப்படும்.

வாக்குப் பதிவுக்கென சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள குழுக் கூட்ட அறை தயாா் செய்யப்பட உள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. வாக்குப் பதிவு ஜூலை 18 -ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடையும். சட்டப் பேரவை உறுப்பினா்கள் வேறு மாநிலங்களிலோ அல்லது நாடாளுமன்ற வளாகத்திலோ வாக்களிக்கலாம். ஆனால், அதுகுறித்து முன்பே பேரவைச் செயலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்க 300 இளஞ்சிவப்பு நிறத்திலான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும். அதில், 25 சீட்டுகள் நாடாளுமன்ற செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு எம்.எல்.ஏ.க்கள் யாரேனும் வாக்களிக்க விரும்பும் பட்சத்தில் இந்த வாக்குச் சீட்டுகள் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

இதேபோன்று, பேரவைச் செயலக வளாகத்திலும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அவா்களுக்கான வாக்குச் சீட்டுகள் நாடாளுமன்ற செயலகத்தில் இருந்து பெறப்படும். குடியரசுத் தலைவா் தோ்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஜூலை 2-ஆம் தேதி முதல் தீவிரமாகும் என பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT