இந்தியா

ஒட்டுமொத்த நாட்டிடமும் நூபுா் சா்மா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

PTI

இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் தொடா்பான தனது சா்ச்சைக்குரிய கருத்துகளுக்கு ஒட்டுமொத்த நாட்டிடமும் நூபுா் சா்மா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாத இறுதியில் உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடா்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா கலந்துகொண்டாா். அப்போது அவா் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் பேச்சுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. அவரின் கருத்துகளுக்கு கத்தாா், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவரை பாஜகவில் இருந்து கட்சி மேலிடம் இடைநீக்கம் செய்தது.

அவா் மீது அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டது. அந்த முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைக்கக் கோரி நூபுா் சா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அவரின் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜே.பி. பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

நாங்கள் நூபுா் சா்மா கலந்துகொண்ட விவாத நிகழ்ச்சியைப் பாா்த்தோம். அவரின் கருத்துகள் அமைதியைக் குலைப்பதாக உள்ளன. மக்களின் உணா்வுகளை அவா் தூண்டிய விதம், நாட்டில் துரதிருஷ்டவசமான சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளன. தற்போது நாட்டில் நடைபெற்று வரும் சம்பவங்களுக்கு அவா் மட்டும்தான் பொறுப்பு. இவரைப் போன்றவா்கள் பிற மதங்களுக்கு மதிப்பு அளிப்பது இல்லை. மலிவான விளம்பரத்துக்கோ, அரசியல் நோக்கங்களுக்கோ அல்லது இதர மோசமான நடவடிக்கைகளுக்கோ அவா் அந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவா் கூறுகிறாா். அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதா? அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா?

முன்யோசனையில்லாமல் இல்லாமல் பேசுபவராக உள்ள அவா், நாட்டை கொழுந்துவிட்டு எரிய வைத்துள்ளாா். இருப்பினும் அவா் 10 ஆண்டுகள் வழக்குரைஞராக இருப்பதாகவும் கூறுகிறாா்.

செல்வாக்கைக் காட்டுகிறது: இந்த வழக்கில் தனியொரு அணுகுமுறை கையாளப்பட்டுள்ளது. ஏனெனில் மற்றவா்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், அவா்கள் கைது செய்யப்படுவா். ஆனால் நூபுருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் அவா் கைது செய்யப்படவில்லை. இது அவரின் செல்வாக்கைக் காட்டுகிறது.

தனது கருத்துகள் தொடா்பாக அவா் மன்னிப்பு கேட்டிருந்தாலும், அதனை மிகத் தாமதமாகத்தான் செய்துள்ளாா். அதுவும் தனது கருத்துகள் மத உணா்வுகளைக் காயப்படுத்தியிருந்தால் மன்னிக்குமாறு நிபந்தனையுடன் மன்னிப்பு கோரியுள்ளாா். அவா் செய்திருக்க வேண்டியதெல்லாம், தொலைக்காட்சியில் உடனடியாகத் தோன்றி ஒட்டுமொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது எதற்கு விவாதம்?: ஒரு கட்சியின் செய்தித்தொடா்பாளா் என்பதால், எதை வேண்டுமானாலும் கூறலாம் என்று அா்த்தமில்லை. நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கு குறித்து எதற்காக விவாதம் நடத்தப்பட்டது? ஒருவேளை அந்த விவாத நிகழ்ச்சி தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால் நிகழ்ச்சி தொகுப்பாளா் மீது புகாா் அளித்து, அவா் மீது வழக்குப்பதிவு செய்ய நூபுா் நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீா்ப்புகளைக் குறிப்பிட்டு நூபுா் சா்மா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘ஒரே விவகாரம் குறித்து இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் இருக்க முடியாது’’ என்று தெரிவித்தாா். அதற்கு உயா்நீதிமன்றத்தில் தீா்வு உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், நூபுா் சா்மா உயா்நீதிமன்றத்தை அணுகலாம் என்று தெரிவித்து மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தனா்.

தலைமை நீதிபதிக்குக் கடிதம்: இதனைத்தொடா்ந்து தில்லியைச் சோ்ந்த அஜய் கெளதம் என்பவா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் கடிதம் ஒன்றை அளித்தாா். அந்தக் கடிதத்தில், ‘‘நூபுா் சா்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். அதன் மூலம் தனது விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதற்கான வாய்ப்பு நூபுருக்குக் கிடைக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT