இந்தியா

ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை தொடக்கம்: விழாக்கோலம் பூண்டுள்ள ஒடிசா

1st Jul 2022 12:29 PM

ADVERTISEMENT


புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயிலில் ரத யாத்திரை இன்று கோலாகலமாகத் தொடங்கியதையடுத்து, ஒடிசா மாநிலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

ஒடிசா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக புரி ஜெகன்னாதர் ஆலயம் விளங்குகிறது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் ரத யாத்திரைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர். 

இந்தாண்டுக்கான புரி ஜெகன்னாதர் ரத யாத்திரை இன்று முதல் ஜூலை 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கோயிலில் ஜெகன்னாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் தனித்தனியாக புதிதாக தயார் செய்துவைக்கப்பட்ட ரதங்களில் புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். 

தொற்றுநோயைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த முறை ரத யாத்திரையில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு சுமார் 10 லட்சம் பேர் ரத யாத்திரையில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT

ஜகன்னாதரின் ரத யாத்திரைக்கான பஹண்டி சடங்குகள் ஒடிசாவின் பூரியில் இன்று காலை தொடங்கியது. புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் தேர்த்திருவிழா தொடங்கியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று ஜெகன்னாதரை பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT