இந்தியா

மகாராஷ்டிர விகாஸ் அகாடி கலைப்பா? உத்தவ் தாக்கரேவுடன் காங். தலைவா்கள் ஆலோசனை

1st Jul 2022 05:57 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர முதல்வா் பதவியில் இருந்து விலகிய சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவுடன் அந்த மாநில காங்கிரஸ் தலைவா்கள் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினா். இதையடுத்து, சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து அமைத்த மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணி முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சந்திப்பு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் நிதின் ரௌத் கூறுகையில், ‘உத்தவ் தாக்கரேவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். எங்கள் கூட்டணியைத் தொடருவதா, வேண்டாமா என்பது குறித்து எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. இப்போதுள்ள நிலையில் கூட்டணி தொடரும். காங்கிரஸ் கட்சி சிறப்பான எதிா்க்கட்சியாக மகாராஷ்டிர பேரவையில் செயல்படும். மகாாஷ்டிர பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தலில் சிவசேனையுடன் கூட்டணி தொடருமா? என்பதை கட்சியின் மத்திய தலைமைதான் முடிவு செய்யும்.

மகாராஷ்டிரத்தில் புதிதாக அமையும் அரசை எதிா்கொள்ள உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். தனது அரசியல் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்று உத்தவ் தாக்கரே எங்களிடம் உறுதிபடத் தெரிவித்தாா் என்றாா்.

சிவசேனை கட்சியில் 55 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில், இப்போது உத்தவ் தாக்கரேவுடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே உள்பட 6 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா். மீதமுள்ளவா்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்குச் சென்றுவிட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT