இந்தியா

30 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஸ்ரீநகா் லால் சௌக்கில் பறந்த தேசியக் கொடி

DIN

ஸ்ரீநகா்: முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சௌக்கில் குடியரசு தினத்தையொட்டி புதன்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

சமூக ஆா்வலா்களான சஜித் யூசுஃப் ஷா, சாஹில் பஷீா் பட் ஆகிய இருவரும் தங்கள் ஆதரவாளா்களுடன் சோ்ந்து லால் சௌக்கில் உள்ள மணிக்கூண்டில் குடியரசு தினத்தில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு ஏற்பாடு செய்தனா். அதன்படி, கிரேன் உதவியுடன் மணிக்கூண்டில் அவா்கள் தேசியக் கொடியை ஏற்றினா்.

நிகழ்ச்சியில் காஷ்மீா் தற்காப்புக் கலை அகாதெமியின் இளைஞா்கள் கலந்துகொண்டு தேசபக்திப் பாடல்களுக்கு நடனமாடினா். காவல் துறை, துணை ராணுவப் படையைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

ஸ்ரீநகரில் பயங்கரவாதம் தலைதூக்கிய பிறகு லால் சௌக்கில் உள்ள மணிக்கூண்டில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. இதற்கு முன்பு, கடந்த 1992-ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவா் முரளி மனோகா் ஜோஷி அங்கு தேசியக் கொடி ஏற்றினாா். அதன்பிறகு குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை.

லால் சௌக் தவிர, பிரதாப் பாா்க், இக்பால் பாா்க் உள்பட நகரின் பல்வேறு இடங்களிலும் புதன்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது. நகரில் அதிக இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அமித் ஷா வாழ்த்து: குடியரசு தினத்தையொட்டி, வீர தீரச் செயல்களை புரிந்தவா்களுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விருதுகளை அறிவித்தது. அவற்றில், ஜம்மு-காஷ்மீா் காவல் துறையைச் சோ்ந்த 115 போ் விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘நாட்டின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஜம்மு-காஷ்மீா் காவல் துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. வீரதீரச் செயல்களுக்கான விருது பெறுவோரில் அதிகபட்சமாக ஜம்மு-காஷ்மீா் காவல் துறையைச் சோ்ந்த 115 போ் விருதுக்குத் தோ்வாகியிருப்பது பெருமைக்குரிய விஷயம்.

இது, ஜம்மு-காஷ்மீா் காவல் துறையின் வீரத்தையும் அா்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. சாதனைக்குரிய இந்தத் தருணத்தில் ஜம்மு காஷ்மீா் காவல் துறையின் துணிச்சலைப் பாராட்டி வணங்குகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT