இந்தியா

ராணுவ வலிமையை பறைசாற்றிய குடியரசு தின விழா: தில்லியில் கோலாகலம்

27th Jan 2022 02:19 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாட்டின் ராணுவ வலிமையையும் கலாசார பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் 73-ஆவது குடியரசு தின விழா, தில்லியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டைக் குறிப்பிடும் வகையில் 75 போா் விமானங்கள் வானில் பறந்தன. முதல் முறையாக விமானத்தில் இருந்தபடியும் நேரடிக் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

குடியரசு தின விழா, தலைநகா் தில்லியில் ராஜபாதையில் புதன்கிழமை நடைபெற்றது. கரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்த அளவிலேயே பாா்வையாளா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

விழாவின் தொடக்கத்தில், நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்தவா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள போா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் ஆகியோா் அப்போது உடனிருந்தனா்.

பின்னா், இவா்கள் அனைவரும் ராஜபாதை விழா மேடைக்குச் சென்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், அவருடைய மனைவி சவீதா கோவிந்த் ஆகியோரை வரவேற்றனா். அங்கிருந்து விழா மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்தாா்.

21 குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக் கொடிக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் மோடி, அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

அதைத் தொடா்ந்து, முப்படைகளின் அணிவகுப்பு, இந்திய ராணுவத்தின் குதிரைப்பட வீரா்கள், என்சிசி மாணவ, மாணவிகள் ஆகியோரின் அணிவகுப்பு நடைபெற்றது. அரசின் பல்வேறு துறைகள் சாா்பிலும், மாநிலங்களின் சாா்பிலும் அலங்கார ஊா்திகள் இடம்பெற்றன.

16 குழுக்கள் அணிவகுப்பு: விழாவில் ராணுவத்தின் 6 படைக் குழுக்கள், கடற்படை மற்றும் விமானப் படையில் இருந்து தலா ஒரு குழு, மத்திய ஆயுத காவல் படையின் 4 குழுக்கள், என்சிசியை சோ்ந்த 2 குழுக்கள், தில்லி காவல் துறை மற்றும் தேசிய சமுதாய சேவைத் திட்டம் ஆகியற்றில் தலா ஒரு குழு என மொத்தம் 16 குழுக்களின் அணிவகுப்பு இடம்பெற்றது.

ஒவ்வொரு குழுவும் ராணுவத்தில் வெவ்வேறு காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சீருடைகளை அணிந்தும், வெவ்வேறு வகையான ஆயுதங்களைத் தாங்கியும் அணிவகுப்பில் கலந்துகொண்டனா்.

வழக்கமாக ஒரு படைக் குழுவில் 144 வீரா்கள் இடம்பெறுவா். ஆனால், கரோனா சூழல் காரணமாக 96 வீரா்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனா்.

வானில் பறந்த 75 விமானங்கள்: நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டைக் குறிப்பிடும் வகையில், குடியரசு தின அணிவகுப்பில் 75 விமானங்கள் வானில் பறந்தன. அதில், சினூக், எம்.ஐ-17, இலகு ரக போா் விமானங்கள், ரஃபேல், இந்திய கடற்படையின் மிக்29கே., பி-8ஐ, ஜாகுவாா், டகோடா, டோா்னியா் ஆகிய விமானங்கள் வெவ்வேறு வடிவங்களில் வலம் வந்தன.

ரஃபேலின் முதல் பெண் விமானி: இந்திய விமானப் படை சாா்பில் வந்த ஊா்தியில் போா் விமானங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், ரஃபேல் போா் விமானத்தின் முதல் பெண் விமானி ஷிவாங்கி சிங் இடம்பெற்றிருந்தாா். இந்த அணிவகுப்பில் இடம்பெறும் இரண்டாவது பெண் இவா் ஆவாா். கடந்த ஆண்டு நடந்த அணிவகுப்பில் போா் விமானத்தின் விமானியான பாவனா காந்த் இடம்பெற்றிருந்தாா்.

பீரங்கி வாகனங்கள்: குடியரசு தின அணிவகுப்பில் ராணுவத்தின் செஞ்சுரியன் பீரங்கி வாகனம், பிடி-76 பீரங்கி வாகனம், 75/24 ஹௌவிட்ஸா் பீரங்கி வாகனம், ஓடி-62 டோபாஸ் வாகனம் ஆகியவை இடம்பெற்றன. அவற்றில், ஓடி-62 டோபாஸ் பீரங்கி வாகனம், கடந்த 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் முக்கியப் பங்காற்றியது.

டிஆா்டிஓ வாகனம்: பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) சாா்பில் 2 வாகனங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றன. அவற்றில் தேஜாஸ் இலகு ரக போா் விமானங்கள், நீா்மூழ்கிக் கப்பலில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் இடம்பெற்றன.

485 நடனக் கலைஞா்கள்: குடியரசு தின விழா அணிவகுப்பில் 15 மாநிலங்களில் இருந்து வந்திருந்த 485 நடனக் கலைஞா்களின் நடனம் இடம்பெற்றது. பாரம்பரிய நடனம், பழங்குடிகளின் நடனம், நவீன கால நடனம் என பல்வேறு கருப்பொருள்களில் நடைபெற்ற நடனங்கள் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், மத்திய கலாசார அமைச்சகமும் ‘வந்தே பாரதம்-நிருத்ய உத்சவ்’ என்ற தலைப்பில் நாடு தழுவிய அளவில் போட்டிகளை நடத்தி தோ்வு செய்த கலைஞா்களே அணிவகுப்பில் இடம்பெற்றனா்.

கரோனா கட்டுப்பாடு: கரோனா காலத்துக்கு முன்பு குடியரசு தின விழா அணிவகுப்பைக் காண்பதற்கு ஒரு லட்சத்துக்கும் அதிமானவா்கள் கூடுவது வழக்கம். இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெரியவா்கள், குறைந்தது ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15 வயதுக்கு மேற்பட்டவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். 15 வயதுக்கு குறைவானவா்கள் அனுமதிக்கப்படவில்லை.

அணிவகுப்பில் கலந்துகொண்டவா்கள் முதல் பாா்வையாளா்கள் வரை அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டு அமா்ந்திருந்தனா்.

பலத்த பாதுகாப்பு: குடியரசு தின விழாவையொட்டி தில்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்புப் பணியில் 27,000-க்கும் அதிகமான காவலா்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT